பொருநை அருங்காட்சியகம் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலையில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதைக் கண்டு பெருமைப்பட வேண்டும். தமிழர்களின் 150 ஆண்டுகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. 2017-இல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது கூட, இப்படியொரு பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமையும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், இன்று நேரில் பார்த்து வியந்தேன்; பெருமையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன்.
“இந்திய வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்றால், அது தமிழக நிலப்பரப்பில் (பொருநையில்) இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்” எனப் பெருமிதம் கொண்டு வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், 2010-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் உலகச் செம்மொழி மாநாட்டிலேயே ஆதிச்சநல்லூரைப் பேசுபொருளாக மாற்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கும், தொல்லியல் துறைச் செயலாளர் திரு. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் முயற்சியால்தான் இந்த அருங்காட்சியகம் அறிவிக்கப்பட்டு, இன்று உலகமே வியக்கும் வண்ணம் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவும் மக்கள் வருகையும்: டிசம்பர் 20, 2025 அன்று இரவு 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். மின்னும் விளக்குகளின் வெளிச்சத்தில் உலகத் தமிழர்கள் வியந்து பார்க்கும்படி இது அமைந்திருந்தது. டிசம்பர் 23-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. முதல் நாளிலிருந்தே மக்கள் ஆர்வத்துடன் குவியத் தொடங்கினர். இதைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கப் பத்திரிகையாளர்களும் திரண்டனர்.
கட்டணமாகப் பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்க 30 ரூபாயும், வீடியோ எடுக்க 100 ரூபாயும் கட்டணம். இங்குள்ள 5D மற்றும் 7D திரையரங்குகளுக்குத் தலா 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசியில் இது மிகக் குறைவான கட்டணமே. பள்ளிக் குழந்தைகளுக்குச் சலுகை உண்டு; அதற்குப் பள்ளித் தலைமையாசிரியரின் கடிதம் அவசியம்.
கண்காட்சிப் பயணம்: முதல் நாள் நான், என் நண்பர் எழுத்தாளர் காளிமுத்து, சிஷ்யன் காமராசு செல்வன், மூத்த பத்திரிகையாளர் இசைக்கும் மணி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருந்தேன். நுழைவுச்சீட்டு எடுத்தவுடன் பார்வையாளர்களைப் பேட்டரி கார் மூலம் அறிமுக அரங்குக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அச்சுரப்பாக்கம் முதல் கீழ நாட்டார்குளம் குத்துக்கல் வரையிலான காலக் கணிப்பு வரைபடத்துடன் கண்காட்சி தொடங்குகிறது. நுண்கற்காலம், இரும்புக் காலம் என மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்க வழிகாட்டிகள் (Guides) உள்ளனர். தொடுதிரை (Touch Screen) மூலம் நாமே வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வசதியும் உண்டு. ஐந்து திணைகளைக் குறிக்கும் வரைபடம், 3150 ஆண்டுகள் பழமையான சிவகளை நெல்மணிகள், 5300 ஆண்டுகள் பழமையான சிவகளை இரும்பு ஆயுதம் ஆகியவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
அங்குத் திரையிடப்பட்ட ஆவணப்படத்தில் திரு. பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், முனைவர் ராஜன், அகழாய்வு இயக்குநர்கள் திரு. பாஸ்கர், திரு. பிரபாகரன், திரு. தங்கத்துரை, செயலாளர் திரு. உதயச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் நேர்காணல்கள் அகழாய்வு வரலாற்றை விளக்கின. சிவகளைத் தளத்தைக் கண்டறிந்த ஆசிரியர் மாணிக்கம் அவர்களின் பேட்டி கூடுதல் சிறப்பு. “உலகிலேயே பழமையான இரும்புப் பொருள் சிவகளையில் கிடைத்ததுதான்” என முனைவர் ராஜன் கூறியபோது மெய்சிலிர்த்தது. துலுக்கர்பட்டி குறியீடுகள் 60 சதவீதம் சிந்து சமவெளி நாகரிகத்தோடு ஒத்துப்போவதாகத் தொல்லியல் இயக்குநர் வசந்தகுமார் கூறியது, சிந்துவெளி நாகரிகம் பொருநை வெளியிலிருந்து சென்றது என்ற பானர்ஜியின் கூற்றை மெய்ப்பிப்பதாக இருந்தது.
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அரங்குகள்: அரங்கை விட்டு வெளியே வந்ததும் எங்களைச் சிவகளை அரங்கிற்கு அழைத்துச் செல்ல பேட்டரி கார் தயாராக இருந்தது. செல்லும் வழியில் நினைவுப் பரிசுகள் மற்றும் பத்தமடைப் பாய் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிவகளைக் கட்டிடம் பழமையைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே சிவகளையில் கிடைத்த பொருட்கள் மற்றும் தங்கம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரும்பை உருக்கும் உலை (Furnace) செயல்முறை விளக்கம் அங்கே தத்ரூபமாக உள்ளது. வெளிநாட்டு அருங்காட்சியகங்களுக்கு இணையாக இது அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காகச் சக்கர நாற்காலி மற்றும் மின்தூக்கி (Lift) வசதிகள் உள்ளன. கருப்பு-சிவப்புப் பானைகள், ஈமத்தாழிகள், வெண்கலக் கலன்கள், தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்பொருட்கள் இங்கே உள்ளன.
அடுத்ததாக ஆதிச்சநல்லூர் கட்டிடம். இதில் நான்கு கேலரிகள் உள்ளன. 150 ஆண்டுகாலக் கோரிக்கைக்குப் பிறகு, பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரின் பெருமையை உலகுக்குச் சொல்கிறது. பிரம்மாண்டமான முதுமக்கள் தாழிகள், அலெக்சாண்டர் ரீ (Alexander Rea) கண்டெடுத்த பொருட்கள், தங்க நெற்றிப்பட்டம், வெண்கல வடிகட்டி எனப் பிரமிக்க வைக்கும் சேகரிப்புகள் இங்கே உள்ளன. பூமிக்குள் முதுமக்கள் தாழி எப்படி இருக்கும் என்பதை ஒரு மாதிரி ‘சைட் மியூசியம்’ போலக் காட்டியுள்ளனர்.
துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை: துலுக்கர்பட்டி அகழாய்வில் கிடைத்த வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயங்கள், தந்தப் பொருட்கள், அரிய கல்மணிகள், சுடுமண் சக்கரங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொற்கை அரங்கில் சங்குகள், வளையல்கள் மற்றும் கடல் சார்ந்த பொருட்கள் உள்ளன. பழமையான துறைமுகங்களின் வரைபடத்தில் கொற்கையும் முசிறியும் இடம் பெற்றுள்ளன. கால்டுவெல், நாகசாமி போன்ற ஆய்வாளர்களின் புகைப்படங்களும் அங்கே உள்ளன.
5D மற்றும் 7D திரையரங்குகள்: 5D திரையரங்கில் பொதிகை மலையில் தாமிரபரணி ஓடி வரும் அழகை 10 நிமிடம் கண்டு ரசிக்கலாம். இருக்கைகள் அசைவது, பாறைகளும் மீன்களும் நம் மீது மோதுவது போன்ற உணர்வு, மழை பொழியும் போது நம் மீது நீர் தெளிப்பது எனத் தொழில்நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது.
அடுத்து 7D திரையரங்கு. கடற்கரைக்குச் செல்லும்போது குளிர் காற்று வீசுவது, யானை தும்பிக்கையால் நீர் தெளிப்பது, கடலுக்குள் முத்துக்குளிக்கச் செல்வது போன்ற காட்சிகள் மெய்நிகர் அனுபவத்தைத் தருகின்றன. செய்துங்கநல்லூர் வயல்வெளிகள், மண்பாண்டம் செய்தல், சங்கு குளித்தல், கொற்கை வணிகம் எனப் பல காட்சிகள் 10 நிமிடத்தில் நம்மைத் திணற வைக்கின்றன.
வசதிகள்:
-
திறந்தவெளி அரங்கம், கைவினைப் பொருட்கள் விற்பனையகம்.
-
பேட்டரி கார் வசதி, நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க இருக்கைகள்.
-
சுத்தமான கழிவறை மற்றும் சிற்றுண்டிச்சாலை.
-
மலை மீது ஒரு ‘செல்பி பாயிண்ட்’ மற்றும் பார்வை மாடம் (View Point).
-
பாளையங்கோட்டை அழகை ரசிக்கலாம்.
பார்வையாளர் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை. மாலை 6 மணிக்கு மேல் நுழைவுச்சீட்டு வழங்கப்படாது. செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும். நமது தொன்மையை அறிந்துகொண்டால் மட்டுமே நாம் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.
மாநில அரசு தந்துள்ள இந்த உலகத் தரமான அருங்காட்சியகம் போல, மத்திய அரசு அறிவித்த ஆதிச்சநல்லூர் சைட் மியூசியமும் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
(நதி வற்றாமல் ஓடும்…)


