தூத்துக்குடி மாவட்டத்தில், எல்எல்ஆர் மூலம் அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த உழைக்கும் பெண்கள், தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், ஓட்டுநர் உரிமத்தின் நகலினை நேரடியாக சமர்ப்பித்து, அம்மா இருசக்கர வாகனம் பெற்று பயன்பெற வேண்டும் என துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு 2017-2018ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2534 பயனாளிகளுக்கு இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல் பட்டிணம் நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ள பயனாளிகளுக்கு மானியத் தொகை அதிகப்பட்சமாக ரூ.25000(ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) வரை மாவட்ட நிர்வாகத்தினால் விடுவிக்கப்பட்டு வருகிறது.
எல்எல்ஆர் மூலம் அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தவர்கள் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். எனவே, தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அனுமதி ஆணையினை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக விண்ணப்பம் சமர்ப்பித்த அலுவலகத்தினை நேரடியாக அணுகி ஓட்டுநர் உரிமத்தின் நகலினைச் சமர்ப்பித்து, அம்மா இருசக்கர வாகனம் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


