ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமையில் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் இன்று நடைபெற உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமான 20 எம்.ஜி.டி திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், அடுத்தகட்டமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கைவிடக்கோரி பொதுமக்களை ஒன்று திரட்டி இறுதிக்கட்ட போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு இன்று ஸ்ரீவைகுண்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.