
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட நீதிமன்றம் தடைவிதித்தது.
இதை தொடர்ந்து மெரினாவில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் நடைபெற்ற இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டங்களை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வருடமும் அவனியாபுரத்தில் 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளான அலங்காநல்லூரில் 16ம் தேதியும் போட்டி வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இதைபோல் ஸ்ரீவைகுண்டத்தில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி 25ம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும் என ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அதற்காக மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் இன்று காலை பூமிபூஜையுடன் ஆயத்த இடத்தினை சீரமைக்கும் பணியும் ஆயத்த வேலைகளும் துவங்கியது. இதில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ராஜா கூறும்போது, நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அனைத்து பகுதியிலும் நடந்தது. அதே போல் ஸ்ரீவைகுண்டத்தில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் இன்று வரை அதற்கான முறையான பதிலை மாவட்ட நிர்வாகம் தரவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்களுக்கு நல்ல பதில் வரும் என்று காத்திருக்கின்றோம் என்றார்.