நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது.
குலசைத் துறைமுகம் ஆப்பிரிக்காவின் கீழக்கரைத் துறைமுகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. தென்தில்லை சுவாமி சிதம்பரேசுவரர் கோயிலுக்கருகே பப்பரப்புளி மரம் காணப்படுகிறது. இம்மரம் ஆப்பிரிக்காவில் மட்டுமே உண்டு. ஆப்பிரிக்க துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதியான பண்டங்களோடு பப்பரப்புளி விதைகளும் வந்திருக்கக்கூடும்.
இந்தப் பப்பரப்புளி மரம் பற்றி இங்கே பல விதமாக பேசப்படுகிறது. இந்த மரம் மிகப்பெரிய மரமாக உள்ளது. இது பார்க்கும்போது பிரமாண்டமாக இருக்கும். இந்த மரம் காதலர்கள் மரம் என்று சொல்கிறார்கள்.
காதலன் ஒருவன் தன் காதலிக்காக நடப்பட்ட மரம் என்று இதைக் கூறுகிறார்கள். ஆகவே இந்த மரத்தில் காதலர்கள் தங்களது பெயரை எழுதி வைத்தால் திருமணம் கைகூடும் என்று நினைக்கிறார்கள். இதனால் இங்கு வந்து பெயரைப் பொறிக்கிறார்கள்.
மரத்தின் சுற்றளவு சுமார் 100 அடி கொண்டதாக உள்ளது. இம்மரத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதன் வயது சுமார் 1300 ஆண்டுகள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆப்பிரிக்காவில் யாராவது இறந்தால் இம்மரக்கன்றை அவர்கள் தலைமாட்டில் நடுவார்களாம். ஆகையால் யாரோ ஒரு ஆப்பிரிக்கர் இங்கு வந்து இறந்தபோது அவரைப் பண்டகசாலை அருகே சமாதி வைத்திருக்கலாம். நாம் இறந்தவர்கள் புதை குழியில் பிரண்டை நடுவது போல் அவர்கள் இம்மரக்கன்றை நட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மரத்தில் காதலர்கள் தொடர்ந்து ஆணி கொண்டு பெயர் எழுதி வந்தார்கள். எனவே இதை தடுக்க வேண்டும் என்று இந்த ஊரை சேர்ந்த ஏ.பி.சங்கரன்பிள்ளை இந்த மரத்தினைப் பாதுகாக்க சுற்றுச்சுவர் எழுப்பி வந்தார். இவர்தான் இந்த மரத்தின் அருகில் உள்ள முப்பந்தல் இயக்கி அம்மன் கோயில் பூசாரி மற்றும் நிர்வாகி. ஆனால் அவரது முயற்சி வீணாகி விட்டது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்து புகழை தேடி யார் வந்தாலும் அவர்களை கூட்டிக்கொண்டு போய் இந்த மரத்தினை காட்டுவேன். அப்படித்தான் பாரதியார் பல்கலைகழக ஆய்வு மாணவர்களோடு நான் அங்கு சென்றேன். என் மனதே வெடித்து விடும் போல இருந்தது. அந்த மரம் சரிந்து கிடந்தது. ஆகா. 1300 வருடங்கள் கடந்த இந்த மரம் சரிந்து விட்டது. யாருமே இதைப் பற்றி பெரிதாக பேச வில்லை. ஆய்வும் இல்லை அறிக்கையும் இல்லை. நமது ஊடக நண்பர்கள் கூட இதை கண்டு கொள்ளவில்லை. சிலர் காற்றடித்தது என்கிறார்கள். சிலர் தானே சாய்ந்து விட்டது என்கிறார்கள். நான் அப்படியே மனம் உடைந்து பேச முடியாமல் மௌனமாகி விட்டேன். கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. 5 நிமிடம் என்னால் பேசவே முடியவில்லை.
பேராசிரியர் சித்ரா அம்மாவும், பேராசிரியர் சங்கர வீர புத்திரன் அய்யாவும் என்னை தேற்றினார்கள். மனம் உடைந்து போன என்னிடம், ‘இங்கே பாருங்கள் தளிர் விட்டு இருக்கிறது . நிச்சயம் வளர்ந்து விடும்’ என்றார்கள். இந்த மரத்தினை வளர்க்க முடியுமா? காப்பாற்ற முடியுமா? தளிர் விட்ட இந்த மரத்துக்கு உயிர் கொடுக்க முடியுமா? நண்பர்களே முயற்சி செய்யுங்களேன்.