152. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
-முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
மணியாச்சி ஜமீன் பரப்பளவு ஏழாயிரம் பண்ணையில் இருந்து திருச்செந்தூர் வரை நீண்டு பரந்திருந்துள்ளது.
பிற்காலத்தில் அந்த பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசி காலத்தில் மணியாச்சி, சொக்கநாதன் புதூர், மகாராஜபுரம், வடமலாபுரம், பறைக்குட்டம், பூவாணி, மறுகால்தலை, சவலாப்பேரி, புளியம்பட்டி, சீவலப்பேரி ஆகிய கிராமங்களுக்குள் அடங்கிய சிறு ஜமீனாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மணியாச்சி ஜமீன்தார் ஆங்கிலேய துரையை அவமதித்த ஒரு சம்பவமே ஆகும்.
ஆங்கிலேய துரையை நேருக்கு நேர் மோதியதால் தனது ஜமீன் எல்கையை இழந்தாலும் கூட இங்குள்ள மக்கள் இவரை ஆங்கிலேய துரைக்கு இணையாகவே மதித்தனர். எனவே மணியாச்சி ஜமீன்தாரை மக்கள் ‘துரை’ என்ற அடைமொழியுடன் அழைத்தனர்.
அது பற்றிய குறிப்புகளை இனி காணலாம்.
ஒரு தடவை மணியாச்சி தர்பார் மண்டபத்தில் பூலோக பாண்டியன் ஜமீன்தார் வீற்றிருக்கிறார்.
முறுக்கிய மீசை. உருட்டிய விழி. எதிரிகள் இவரை கண்டாலே அடி பணிந்து விடுவர். நல்ல ஆட்சி ஆண்ட மன்னருக்கு இறைபக்தி எப்போதுமே அதிகம். எனவே தான் இறைவனை தவிர யாரையும் மதிப்பதில்லை. குதிரையில் ஏறி இவர் சென்றாலே போதும் மிடுக்கான இவரது தோற்றத்தில் மிரண்டு போகாதவர்கள் யாரும் இல்லை.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட நேரம். ஆங்கிலேயருக்கு அடங்கி போகவில்லை என இளையரசனேந்தல் ஜமீன் குடும்பத்தினை பார்ட்-1 பார்ட்-2 என பிரித்து ஆண்ட காலம். அதுபோலவே மணியாச்சி ஜமீன் தாருக்கும் ஆங்கிலேயர்களால் பல நெருக்கடி இருந்தது.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இடித்து தகர்க்கப்பட்டதுடன், அவர்களது ஆதரவு ஜமீன்தாரான எட்டயபுரம் ஜமீன் கோட்டையும் இடித்து தள்ளப்பட்டது. இதில் மணியாச்சி உள்பட பல ஜமீன் கோட்டைகள் விதி விலக்கல்ல. ஆனாலும் அரண்மனை தர்பார் என ஜமீன்தாருக்கு எதுவுமே குறை வில்லாமலேயே ஆட்சி புரிந்து வந்தனர்.
ஆரம்ப காலத்தில் இருந்தே பூலித்தேவன் கிழக்கிந்திய கம்பேனியிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு மறவர் பாளையம் முழுவதும் துணை நின்றது. பூலித்தேவனுக்கு உதவியாகத் தான் இருந்தார்கள். எனவே நவாபிற்கும் இவர்களுக்கும் நல்லுறவு காணப்படவில்லை.
அந்த சமயத்தில் மணியாச்சி ஜமீன்தார் நவாப் மன்னர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். அடிக்கடி மருதநாயகம் என்னும் கான்சாகிப் தென் பகுதியில் படையுடன் திரண்டு தாக்கி கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் மணியாச்சி ஜமீன் தப்பவில்லை.
சில சமயங்களில் கான்சாகிப் படையெடுப்பு மணியாச்சி ஜமீன் தாரை நிலைகுலைய செய்தது. அவரின் கிடுக்கு பிடியில் சில நேரம் மணியாச்சி ஜமீன் பாதிக்கப்பட்டது. கான்சாகிப் வெற்றிக்கு சீவலப்பேரி அருகே உள்ள ‘கான்சாபுரம்’ என்னும் ஊர் சான்றாகும்.
கான்சாகிப்புரமே பிற்காலத்தில் மருவி கான்சாபுரம் என ஆகி விட்டது. இதனால் மணியாச்சி ஜமீன்தாருக்கு நவாப் புக்கு ஆதரவு அளித்து வந்த கிழக்கிந்திய கம்பேனி காரர்களை கண்டாலே பிடிக்காது.
மறவர் பாளையங்களில் பலர் கும்பேனி மீது போர் குணமே கொண்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் இருந்தே அவர்களின் எதிர்ப்பு ஜமீன்தார் காலத்தில் கிழக் கிந்திய கம்பேனி வரை தொடர்ந்தது.
ஆனாலும் நவாப் படைகளை தங்களது சிறு படையை வைத்துக் கொண்டு ஓட ஓட விரட்டிய சிறப்பு மணியாச்சி ஜமீன்தாரின் முன்னோர்களும் இங்கு வாழ்ந்த துண்டு.
ஒரு கால கட்டத்தில் ஆற்காடு நவாப் மணியாச்சி ஜமீனை படை எடுத்து தாக்க வேண்டும் என ஏற்பாடு செய்தார். அப்போது மணியாச்சி ஜமீன்தாரிடம் 1000 படை வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் இருந்து குதிரைப் படையும் கலாட் படையும் தான். அதிகமான ஆயுதங்களும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் மணியாச்சி ஜமீன் படை வீரர்கள் நெஞ்சுறுதி கொண்டவர்கள்.
எப்படியும் நவாப் படை வீரர்களை தாக்கி வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையோடு இருந்தார்.
ஜமீன்தார் பூலோக பாண்டிய தலைவன் சிறப்பாக வியூகம் அமைத்தார். அதற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அவரது படைவீரர்கள் தயாரானார்கள். அதன் படி குருமலை அருகே நவாப் படைகள் வரும் தருணத்தினை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
குருமலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் படை வீரர்கள் வரிசை யாகத்தான் வர முடியும், நெருக்க டியான இடம். ஒருவர் பின் ஒருவராகதான் படை வீரர்கள் வரவேண்டும் அப்போது வரும் வழியில் இருபக்கம் மரங்கள் அடர்ந்து காணப்பட்ட இடத்தில் ஏற்கனவே திட்டமிட்ட படி மீன்படை மரத்துக்குள் ஆயுதங்களுடன் அரவமின்றி அமர்ந்து இருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் நவாப் படை வீரர்கள் அங்கு வந்து சேர்த்தனர். குறுகலான பாதையில் நடந்து வந்தனர். இது தான் நல்ல தருணம் என ஜமீன் படை அவர்கள் மீது கொரில்லா தாக்கல் நடத்தியது.
அவ்வளவுதான் நவாப் படை நலாபுறமும் தெறித்து ஓட ஆரம்பித்தது. கூரிய வாளால் மணியாச்சி ஜமீன்தார் நவாப் படை வீரர்களின் தலையை சீவினர். தெறித்து ஓடிய படை வீரர்களின் மார்பில் ஜமீன் படைவீர்களின் அம்பு பாய்ந்தது. ஈட்டியுடன் பாய்ந்து நவாப் படை வீரர்கள் துவசம் செய்தனர்.
உயிர் பிழைத்தால் போதும் என நவாப் படைகள் தோல்வியை ஒப்பு க்கொண்டு ஓடினர். அதன்பிறகு மணியாச்சி ஜமீன்தார்கள் என்றாலே பயந்து நடுங்கினர்.
வெற்றியை தனது படை வீரர்களுடன் கொண்டாடினார் ஜமீன்தார். தலையை வெட்டி எதிரியை வென்ற படை வீரர்களுக்கு தனி கிராமமே அமைத்தார். ஊருக்கு வடக்கே உள்ள குருமலையில் வெற்றி அடைந்த காரணத்தினால் அந்த ஊருக்கு ‘வடமலையாபுரம்’ என்று பெயர் வைத்தார்கள்.
அருகிலேயே ‘மகாராஜாபுரம்’ என்ற ஊரும் உண்டு. ஒரு கால கட்டத்தில் இங்கு அரண்மனை இங்கிருந்துள்ளது. போர் பயிற்சி நடந்துள்ளது. இன்று இந்த இரண்டு ஊரும் சிறு கிராமமாக காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டு குடிதண்ணீர் திட்டம் மூலமாக அருப்புகோட்டைக்கு குடிதண்ணீர்செல்லும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சில தெருக்களுடன் மகாராஜபுரம் தற்போது காட்சியளிக்கிறது. அங்கு அரண்மனை இருந்தற்கான சுவடுகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை.
மணியாச்சி ஜமீன்தார்களின் முன்னோர் போரில் நவாப் உடன் போரிட்டு வெற்றி பெற்றவர்கள். தொடர்ந்து யாருக்குமே தலை வணங்காமலேயே ஆட்சி செய்து வந்தனர். இந்த சமயத்தில் தான் கிழக்கிந்திய கம்பேனியின் கீழ் மணியாச்சி ஜமீன்தாரின் ஆளுகை வந்தது.
மணியாச்சி பூமி வானம் பார்த்த பூமி. கரிசல் காடு. மழை பெய்யவில்லை யென்றால் பூமியும் பொய்த்து விடும். பூமி பொய்த்து விட்டால் ஆங்கில அரசுக்கு எப்படி கப்பம் கட்ட முடியும்.
இது போல தான் தொடர்ந்து இரண்டு ஆண்டு பஞ்சம் வந்த காரணத்தினால், கப்பம் கட்டமுடியவில்லை. ஆனாலும் ஆங்கிலேயருக்கு அடி பணிய மணியாச்சி ஜமீன்தாருக்கு எண்ணமும் இல்லை. எனவே ஆங்கிலேய துரையை நேரில் பார்த்து தவணை கேட்கவும் இல்லை. இதற்கிடையில் ஜமீன்தாரை தேடி ஆங்கிலேய துரை மணியாச்சி ஜமீனுக்கு வந்து விட்டார்.
அப்போது நடந்த செயல் தான் ஜமீன்தாரின் எல்கை சுருங்க காரணமாக அமைந்து விட்டது.
(இன்னும் வருவார்கள்)