முன்கதைச் சுருக்கம்:
சுதந்திரம் அடையும் முன்பு நடந்த சம்பவம் இதுவாகும். திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது காந்தியடிகளின் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷம் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வேளையில்தான் குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கொடுமையான வெள்ளைத்துரையான லோன் துரை என்பவன் நம்மவர்களை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தி அடக்குமுறையில் வேலை வாங்கினான். இதைப் பொறுக்காத காங்கிரஸ் இளைஞர்கள் அவனைப் பழி வாங்க வேண்டும் என நினைத்தனர். அவனைப் பயங்காட்டி மிரட்டி வைக்க வேண்டும் என்று இரவில் உப்பளத்துக்குள் இறங்கினர். இந்த சம்பவத்தில் அவன் கொலை செய்யப்பட்டான். கொலையாளிகள் அதன்பின் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க டெப்டி சூப்பிரண்டெண்ட் ராவ்பகதூர் டி. எம். அப்பாத்துரைப் பிள்ளை தலைமையில் போலீசார் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகளுக்கு உதவிய மேகநாதன் போலீசாரால் விரட்டப்படுகிறான். சித்தன்விளை பெரியநாடார் இல்லத்தில் போலீசார் சோதனை நடத்துகிறார்கள். தப்பி ஓடியவர்களைப் போலீசார் கைது செய்தார்களா?
இனி.
தேரிக்காட்டுக்குள் இருக்கும் கொலையாளியை எப்படிக் கண்டுபிடிப்பது? முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.
தேரிக்காடு என்பது சாதாரணமா? உள்ளே விறகு பொறுக்கச் சென்றவர்கள் கூட தங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றால் அந்தந்த ஊரில் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட கோபுர விளக்கைப் பார்த்துதான் வெளியே வருவார்கள்.
வெளியே வருவதற்கு இது போன்ற சூட்சுமத்தினைப் பயன்படுத்துவார்கள். ஆனால் உள்ளே இருக்கும் மக்களை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பார்கள்?
மிகவும் கஷ்டம்தான். ஆனாலும் போலீசார் இவர்களுக்கு யாராவது தொடர்பு இருக்கிறதா? அல்லது தொடர்பு உள்ளவர்களை நோக்கி யாராவது செல்கிறார்களா என கவனமாகப் பார்க்க வேண்டும் எனப் போலீசார் வேவு பார்த்தனர்.
இதில் மிகக் கொடுமையாக மாட்டிக்கொண்டவர்கள் குற்றவாளிகளின் குடும்பத்தார். அதில் சிக்கிக்கொண்டவர்கள் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
தாய் தந்தையரைக் காப்பாற்ற எப்படியும் குற்றவாளிகள் வெளியே வரவேண்டும்.
சரி. தாய் தந்தையர்களுக்குக் கொடுமை எப்படி நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் அல்லவா? எப்படித் தெரியப்படுத்துவது?
போலீசார் முடிவு செய்தனர். அதில் முதலில் கிடைத்தவர்கள் மந்திரகோனின் தாய் தந்தையர்கள்.
லோன்துரையால் குத்தப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்த தியாகி தேரியூர் மந்திரக்கோனார்.
இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு லோன்துரையின் துப்பாக்கியில் மாட்டிய கத்தியால் குத்தப்பட்டபோது காயம் ஏற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியவர் மந்திரக்கோனார். இவர் நிச்சயம் சிகிச்சைக்காகப் படாத பாடுபட்டுக்கொண்டிருப்பார். எனவே அவரைக் குறிவைக்க வேண்டும்.

உடன்குடி தேரியூர்.
வைரவக் கோனாருக்கும் இசக்கியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் மந்திரகோன். அவருடன் பிறந்தவர்கள் 8 பேர். என்னையும் சேர்த்து 9 பேர். இவர்களில் 3 பேர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.
மீதமுள்ள 8 பேரில் மந்திரகோன் மட்டும்தான் ஆண்பிள்ளை. மற்ற 5 பேரும் என் சகோதரிகள். இவருடைய தந்தையாருக்கு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அவருடைய வீடு சுவரால் கட்டப்பட்டு ஓலைக் கூரையால் வேயப்பட்டது. ஓலைக்கூரை என்றாலும் 9 கதவுகளைக் கொண்ட பெரிய வீடு. இவருடைய தந்தையார் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்தாலும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தார். மந்திரகோன் 7 வயது வரை ஆட்டுப் பாலைக் குடித்தே வளர்ந்தார். அவருடன் பிறந்தவர்கள் என்னைத் தவிர எல்லோரும் பெண்கள் என்பதால் இவரை வீட்டில் மிகவும் செல்லமாக வளர்த்தனர். உடன்குடி பிள்ளைமார் தெருவில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி வந்த ஆறுமுகம் பிள்ளை அவர்களின் பள்ளியில் சேர்ந்து 6 வருடம் படித்தார்.
அதன்பின்னர் சைவப்பிரகாச வித்தியா சாலையில் ஓராண்டுப் படித்தார். அப்போது அவருக்கு வயது 12. மேலே படிக்க விரும்பாமல் உடன்குடி பஜாரில் மளிகைக் கடை வைத்திருந்த சாமுவேல் நாடார் என்பவரது கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
முதலாளி “வெள்ளையர்களால்தான் இந்தியாவை ஆள முடியும். இந்தியர்களிடம் இந்தியாவை ஒப்படைத்தால் இந்தியா சீரழிந்துவிடும்” என அடிக்கடி கூறுவார். மந்திரகோனுக்கும் அவருக்கும் அநேக வேளைகளில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
அவர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது (1936-ஆம் ஆண்டு) ஒரு நாள் சந்தையடியூர் நாராயணசுவாமி கோவிலில் நாடகம் நடக்க இருப்பதாக அறிந்தார். அவரும் இரவில் கடையைப் பூட்டிய பின்னர் நாடகம் பார்க்கச் சென்றார். சிவந்திக்கனி அம்மாள் ரைஸ்மில் இருக்கும் இடத்தில் நாடகம் நடைபெற்றது. விஸ்வநாததாஸ் என்ற புகழ்பெற்ற நடிகர் நாடகத்தில் நடித்தார்.
நாடகத்தில் ஓர் இடத்தில் வெள்ளையர்களைத் தாக்குகின்ற விதமாக “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடலைப் பாடினார். நாடகம் முடியவும் போலீசார் அவரைக் கைது செய்தனர். அதனைப் பார்த்த மந்திரகோனுக்கு ஆத்திரமாக வந்தது.

‘இந்தியத் திருநாட்டிலே ஒரு பாட்டுப் படிப்பதற்குக்கூட ஒருவனுக்கு உரிமை இல்லையா? நாமும் காங்கிரஸ் கட்சியிலே சேர வேண்டும். இந்நாட்டிற்காக உழைக்க வேண்டும்’ என எண்ணினார். பின்னர், 1941-இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவர் அக்கட்சியில் சேரக் காரணம் மேகநாதன்தான். ஒவ்வொரு இளைஞரையும் சந்தித்து காங்கிரஸ் கட்சி இந்திய விடுதலைக்காகப் போராடும் விதம் குறித்து விளக்கி விடுதலை உணர்வைத் தூண்டியதே அவர்தான். இந்நேரத்தில் புகையிலைக் கடை நடத்தி வந்த சித்திரம் பிள்ளை பணத்தைப் போராட்டங்களுக்காக வாரி இறைத்தார்.
சதிவேலையின் மூலம் மேகநாதன் உடன்குடிப் பகுதியில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். அவருக்குச் சித்திரம் பிள்ளையும் உதவினார். தமிழக காங்கிரசார் என்ன செய்ய வேண்டும் என்பதை காந்திஜி காமராஜருக்குக் கூறுவார். காமராஜர் தமிழகத் தொண்டர்களுக்கு ஆணையிடுவார். ‘வெள்ளையருக்கு ஆதரவாகப் போருக்குச் செல்லக் கூடாது, வரி செலுத்தக் கூடாது’ போன்ற ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி ஆரம்பித்தார். அதற்கு உடன்குடித் தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துக் கிறிஸ்தியாநகரம் கிறிஸ்தவப் பள்ளி மைதானத்திற்கு வடக்குப்புறம் உள்ள கொடிக்காலில் மேகநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காயாமொழியைச் சேர்ந்த எஸ்.டி. ஆதித்தன் கலந்துகொண்டு பேசினார். போலீசார் அவரைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து காத்தக்குட்டித் தேவர் பேசினார். அவரைப் போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் வரை கொண்டு சென்று, மாலையில் விட்டுவிட்டனர். மேகநாதன் தப்பித்துவிட்டார். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்தால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்த வெள்ளை அரசு அவர்களைக் கைது செய்ய மறுத்தது. எனவே காந்திஜியின் ஆணையை ஏற்று நாடெங்கிலும் உள்ள தொண்டர்கள் டெல்லி வரை நடைபயணம் மேற்கொண்டனர். இவ்வாறு டெல்லியை நோக்கிப் புறப்பட்ட ஆலந்தலை பெஞ்சமினும், சிறுநாடார்குடியிருப்பு சரவணப்பெருமாளும் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டனர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளுக்கிணங்க காந்திஜி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினார். எனவே போராட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறு உடன்குடி பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் மந்திரகோனும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் உப்பளத்திலுள்ள துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ராஜகோபால் தலைமையில் உப்பளத்திற்குச் சென்று லோன்துரையைக் குத்திச் சாய்த்துவிட்டனர்.

லோன்துரை கொலை நடைபெற்ற பின்னர் நாகர்கோவிலுக்குத் தப்பி ஓடிவிட்டார்.
நாகர்கோவிலில் போலீஸ் பிடித்துவிடுவார்களோ என பயம். எனவே அங்கிருந்து கோவில்பட்டி ஓடிவந்தார்.
இந்த வேளையில்தான் இவரது வீட்டை போலீஸ் நொறுக்கிவிட்டனர். அவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த பசுமாடு ஒன்றை முன்சீப் கொண்டு சென்றுவிட்டார்.
ஆடுகளை அவிழ்த்துவிட்டு விரட்டினர். அவரது குடும்பத்தினரைப் போலீஸ் அடித்துத் துன்புறுத்தினர். மந்திரகோன் போலீசில் சரண் அடையாவிடில் அவர்களது பெற்றோர்களைக் கொன்றே விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.
ஒரு நாள் தேரியூரைச் சேர்ந்த மணி கோவில்பட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே மந்திரகோனைப் பார்த்தார்.
“மந்திரம் நீ இங்கே இருக்கிறாய். நீ போலீசில் மட்டும் சிக்கவில்லை என்றால் உன் குடும்பத்தினை அடித்துக் கொன்றுவிடுவார்கள்” என்றார்.
வேதனையுடன் அவர் முகத்தினைப் பார்த்தார் மந்திரகோன்.
“ஏடேய் மந்திரகோன், படுக்கபத்தில் மேகநாதன் வீட்டை அடித்து தரைமட்டமாக ஆக்கிவிட்டார்கள்.”
மந்திரகோன் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. நம்மை எப்படி வளர்த்தார்கள் பெற்றோர்கள். நமக்காக அவர்கள் அடி வாங்குவதா? அதைப் பொறுக்க முடியாது. என்ன ஆனாலும் சரி. ஏற்கனவே கத்திக்குத்துப் பட்டும் நாமே மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். போலீசிடம் மாட்டி கூடுதலாக அடிபட்டுச் செத்தாலும் இந்த மண்ணுக்காக நம் உயிர் போகவேண்டும். ஆனால் எந்தக் காரணத்தினைக் கொண்டும் நமது பெற்றோர்கள் உயிர் போய்விடக்கூடாது. எனவே நாம் போலீசில் சரண் அடைவதுதான் சாலச்சிறந்தது என முடிவு செய்தார் மந்திரகோன்.
மறுநிமிடம் அவர் எடுத்த முடிவு, கொலை வழக்கையே திருப்பிப் போட்டது.
டெப்டி சூப்பிரண்டெண்ட் ராவ்பகதூர் டி.எம்.அப்பாத்துரைப் பிள்ளை மிகவும் கோபமாக இருந்தார். எப்படி ஒரு கொலை வழக்கில் இவர்கள்தான் குற்றவாளி எனத் தெரிந்தும் ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை.
27 பேரில் ஒருவர் தலையைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலே இருந்து பயங்கரமான பிரஷர். ஒரு வெள்ளைக்காரத்துரையைக் கொன்றுஇருக்கிறார்கள். கீழே என்ன மயிரைப் புடுங்குகிறீர்கள் என மேலதிகாரிகள் இவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இனி போலீசை நம்பிப் பிரயோஜனம் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் போலீஸ் தரப்பில் பொதுமக்கள் ஒருவரை நாம் நியமிக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் கோள் சொல்ல ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அந்தக் கோள் சொல்லிகள் அனைவரையும் கூப்பிட்டுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
“இங்க பாருங்க. நீங்க போலீஸ் ஆளு. காக்கிச் சட்டை மட்டும்தான் போடல. ஆனா போலீஸ்காரங்க. நீங்க லோன்துரை குற்றவாளியைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா உங்களுக்கு ரிவார்டு தாருவோம்” என்றார்.
அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் விவரமானவர்கள்தான். அரசு இடம் காட்டிக்கொடுத்தால் நமக்குப் பல சலுகைகள் கிடைக்கும் என்பதால் காட்டிக்கொடுக்கத் தயாராக இருந்தனர்.
சூப்பிரண்டெண்ட் கூறினார்,
“தேரிக்காட்டுக்குள்ளதான் குற்றவாளிகள் இருக்கணும். நிச்சயம் அவனுவளுக்கு உணவு ஊருக்குள்ள இருந்துதான் போணும். அதனால யாராவது சந்தேகம் ஏற்படும் விதமான காட்டுக்குள்ள போனா உடனே என்கிட்ட தகவல் சொல்லுங்க. இல்லாட்டி பக்கத்துல உள்ள போலீஸ்கிட்ட சொல்லுங்க.”
“சரி எஜமான்.”
“இதுபோக இந்த 27 பேர் இந்த போர்டுல எழுதிப் போட்டு இருக்கோம். இதுல படிக்கத் தெரியாதவர்களுக்காக அவனுவளையும், அவனுவ ஊரையும் சொல்லுதேன். அத்தனை பயலுவளும் உடன்குடி பஜாருல சுத்துறவனுகத்தான். அதனால உங்களுக்கு அடையாளம் கண்டிப்பா தெரியும். இவனுவ தலை தெரிஞ்சா உடனே போலீசுக்குத் தகவல் தெரிவியுங்க”

என்று கூறிவிட்டு 27 பேரையும் ஊரையும் படிக்க ஆரம்பித்துவிட்டார் ராவ்பகதூர் டி.எம். அப்பாத்துரைப் பிள்ளை.
- ராஜகோபால்,
- காசிராஜன்,
- ஏ.எஸ். பெஞ்சமின்,
- ஆர்.செல்லத்துரை,
- தர்மம் கோயில் பிள்ளை,
- கே. பொன்னையா நாடார்,
- பி. நாராயணப்பிள்ளை,
- ரெத்தினசாமி என்ற பெருமாள் நாடார்.
- மகாராஜன் நாடார்.
- தேவரிரக்கம் நாடார்.
- கனிநாடார் நாடார்.
- செல்லத்துரை,
- தங்கையா நாடார்.
- ஆறுமுக நாடார்.
- நாராயணன். நெல்லையப்ப சேர்வை,
- சிவந்திகண் என்ற முத்துமாலை நாடார்,
- தங்கச்சாமி நாடார்,
- மோட்டார் என்ற ரெத்தினசாமி,
- பூவலிங்கம் நாடார்.
- மு.லெட்சுமணன்,
- தங்கையா என்ற ஆசிர்வாத நாடார்,
- காசி நாடார்,
- துரைச்சாமி நாடார்,
- க. லட்சுமண நாடார்.
- வி. மந்திரக்கோன்
அவர் பெயரைக் குறிப்பிட்டுக் கூறிக்கொண்டே இருந்தார். அனைவரிடமும் மீண்டும் கூறினார்.
“இங்கே பாருங்க இந்த சோவாரிக எல்லோரும் உங்களுக்குத் தெரியும். நிச்சயம் நீங்க பிடிச்சுத் தரணும்”.
அனைவரும் தலையாட்டினர்.
வந்த கோள் சொல்லி ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒரு ரூபாயைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பாத்துரைப் பிள்ளை.
அவர்கள் அனைவரும் சந்தோஷமாகக் கிளம்பினர்.
ஊரில் கண்கொத்திப் பாம்பாகக் குற்றவாளியைத் தேடிக்கொண்டிருந்தனர்.
ராஜகோபால், காசிராஜன், பெஞ்சமின் ஆகிய மூவரும் பன்னம்பாறைக்குத் தென்மேற்கே உள்ள ஒரு காட்டிற்குள் தலைமறைவாக இருந்தனர்.
ராஜகோபால், “ஏடேய் எத்தனை நாளைக்குத்தான் இப்படி மறைஞ்சு வாழப்போறோம். எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. பேசாம நாம போலீசுல சரண் அடைஞ்சிருவோம்”.
காசிராஜன், “என்னடே புத்தி படிச்ச. இதுக்கா நாம இவ்வளவு நாளா காட்டுக்குள்ள காத்துக் கிடக்கோம்”.
“சரி. நாம மறைஞ்சிக் கிடந்து என்னத்தைச் சாதிக்கப்போறோம். நம்ம சாதி சனங்க போலீசுக்கிட்ட அடிவாங்குனதுதான் மிச்சம்”.
பெஞ்சமின் தனது கருத்தைப் பதிவிட்டான்.
“ம். கூம். கூடாது. நாம போலீசுக்கிட்ட மாட்டக்கூடாது. நம்மகிட்ட இவன் மாட்ட மாட்டான்னு போலீசு ரத்தக்கண்ணீர் வடிக்கணும். அதுவரைக்கும் நாம மாட்டக்கூடாது”.
ராஜகோபால் உறுதியாகக் கூறினான்.
ஆனால் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.
இந்த மூன்று பேருக்கும் இவர்களின் நண்பன் சுடலை சாப்பாட்டை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
சுடலை காட்டுக்குள் செல்வதைப் பார்த்துதான் அந்த ஊரு செல்வம், அவன் போலீசின் உளவாளி.
இவன் ஏண்டா இவ்வளவு பெரிய கூடை கொண்டுபோறான்? சந்தேகத்துடன் அருகில் சென்றான்.
“என்னடே சுடலை எங்க போறே?”
“காட்டுக்குள்ள எங்க அம்மா வெறகு பொறுக்கப்போனா. அவளுக்குச் சோறு கொண்டுபோறேன்”.
“ஓகோ. உங்க அம்மா டிபன் கேரியர்ல சோறு சாப்பிடுவாளோ?”
இவன் பேச்சு சந்தேகமாக இருந்தது.
“ஒருவேளை கண்டுபிடித்து இருப்பானோ?”
“எங்க அம்மா மட்டுமில்லடே எங்க சித்தியும் தெருவுகாரவியளும் போயிருக்காவ.” சுடலை வெடவெடத்துப் போனான்.
“அப்படியோ வெறவு பொறுக்க 1 வாரம் காட்டுக்குள்ள தங்கியிருக்காவளோ?”
செல்வம் பேச்சு எக்காளமாய் இருந்தது.
“ம். ம். எனக்குச் சுமை கனக்கு. வேகமா போணும்”.
சுடலை அங்கிருந்து கிளம்பினான். “இவன் கள்ளப்பய. நிச்சயம் களவாணிப்பயலுவ இங்கதான் எங்கேயோ ஒளிஞ்சிக் கிடக்கணுவ. விடக்கூடாது”.
24.09.1942
அந்த நேரம் பார்த்து நாங்குநேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே. வரதாச்சாமி அந்த வழியாக வந்தார்.
“எஜமான் நில்லுங்க”.
“என்னலே?”
“எஜமான் உங்ககிட்ட ரகசியம் சொல்லணும்”.
“என்ன ரகசியம்?”
“லோன்துரை கொலை பண்ணுனனுவ பன்னம்பாறை காட்டுக்குள்ளத்தான் இருக்கானுவ”.
“எப்படிடே சொல்லுத?”
“எஜமான். ஒரு பய தயங்கித் தயங்கி டிபன் கேரியர்ல சாப்பாடு கொண்டுபோறேன்”.
“அப்படியா?”
“ஆமாம் எஜமான்”.
“என்னடே சொல்லுத?”
“ஆமாம் எஜமான். மூணு பேரு மூணு நாளைக்குச் சாப்பிடலாம். அவ்வளவு பெரிய கேரியரு”.
“எங்கல அந்தச் சாப்பாடு கேரியரு போகுது?”
“மேக்கப் பாத்துப் போறான்”.
“ஜீப்பில ஏறுல அவனைக் கண்டுபிடிப்போம்”.
ஜீப்பில் ஏறினான் செல்வம். மேற்கு நோக்கி ஜீப் கிளம்பியது.
சற்று நேரத்தில் பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தான் சுடலை. அவனை மடக்கிப் பிடித்தனர்.
அவன் பரக்கப் பரக்க முழித்தான்.
கான்ஸ்டபிள் ஒருவர் அவனை லத்தியால் பின்பகுதியில் அடித்தான்.
“எஜமான் அடிக்காதீய. நான் சொல்லிப்புடுதேன்.”
சுடலை கத்தினான்.
“யாருக்குலே சாப்பாடு கொண்டுபோறே?”
“எஜமான், ஆறுமுகநேரி ராஜகோபாலும், காசிராஜனும், அமலிநகர் பெஞ்சமினும் உள்ள இருக்கானுவ. அவனுவளுக்குத்தான் சாப்பாடு கொண்டுபோறேன்”.
“சபாஷ். இந்த மூணு பேரும்தான் முக்கியமான குற்றவாளி. இந்த மூணு பேரைப் பிடிச்சிட்டாலே போதும் அத்தனை பயலுவளும் வந்து விழுந்திருவானுவ”.
“சரி. ஏலேய் இங்க பாரு. நீ எப்போதுபோல சாப்பாடு கொண்டுபோ. சந்தேகப்பட வச்சிறாதே. நாங்க பின்னால வாறோம். கரெக்டா அவனுவகிட்ட போய் சாப்பாடை இறக்கு பின்னாலே வந்து நாங்க பிடிச்சிப்புடுதோம்”.
தலையாட்டினான். “எதுக்கும் செல்வத்தைக் கூடக் கூட்டிட்டுப் போ”.
“கூட யாரும் வந்தா சந்தேகப்படுவாவ”.
“ஏலேய் அவன் உன் நண்பன், காட்டுக்குள்ள வரப் பயமா இருக்கு. அதான் கூட்டிட்டு வந்தேன்னு சொல்லு”.
“சரி”. தலையாட்டினான்.
திரும்பவும் கூடையைத் தலையில் ஏற்றினர். அவன் கையில் இருந்த பையைச் செல்வம் வைத்துக்கொண்டான். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போகப் போலீசார் மறைவாகப் பின் சென்றார்கள்.
பன்னம்பாறை காட்டுக்குள் பதுங்கியிருந்தனர் ராஜகோபால், காசிராஜன், பெஞ்சமின் ஆகியோர்.
இந்த மூன்று பேரும்தான் முக்கியக் குற்றவாளிகள்.
இவர்களைப் பிடித்துவிட்டால் மொத்தக் குழுவையுமே பிடித்துவிடலாம். அந்த அளவுக்கு அதிமுக்கியக் குற்றவாளிகள்.
எனவே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மிகவும் கவனமாக இருந்தான்.
ஒருவேளை அவர்கள் தப்பி ஓடினால் அவர்களைச் சுட்டுப் பிடிக்க வேண்டும். எப்படியும் பிடித்துவிட வேண்டும்.
இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் மறைந்தபடியே சென்றனர்.
குறிப்பிட்ட இடத்தில் டிபன் கேரியர் வருவதைக் கண்ட மூன்று பேரும் ஆர்வமாக ஓடி வந்தனர்.
சுடலையுடன் மற்றொருவர் வருகிறார். யார் இவர் என கேள்வி எழும்பியது. எனவே சற்றுத் தயக்கம் காட்டினர்.
“சுடலை, யாரு இவன்?”
சத்தம் காட்டவில்லை சுடலை.
“ஏலேய் கேட்கமுல்லா, யாரு இவன்?”
சிரித்தான் செல்வம். “நானா, இவன் கூட்டாளி. சுமக்க முடியலை. கொஞ்சம் கூட வான்னு கூப்பிட்டான் வந்தேன்” என்றான்.
“பொய் சொல்லாத. இவனுக்குக் கூட்டாளி கிடையாது நீ யாரு?”
செல்வம், “என்னடே சொல்லுதிய. உங்களை எனக்குத் தெரியும். இவன் கூட எத்தனை நாளு பாத்து இருக்கேன்”.
“அனைத்தும் பொய். சுடலைக்கு யாரும் நண்பர்கள் கிடையாது”.
“ஏடே பொய் சொல்லாத. பொறவு எங்களுக்குக் கோபம் வரும்”.
பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே, போலீசார் சுற்றி வளைத்தனர்.
“மூணு பேரும் அசையாதீங்க. சுட்டா செத்துப்போயிருவீய”.
மூன்று பேரும் கையைத் தலைக்கு மேல் தூக்கிச் சரண்டர் ஆனார்கள்.
சுடலை தேம்பித் தேம்பி அழுதான்.
“கவலைப்படாதே சுடலை. நீ வேணுமுன்னு காட்டிக்கொடுத்து இருக்கமாட்டே. எங்களுக்குத் தெரியும். ஆனா எத்தனை நாளைக்குத்தான் தலைமறைவா இருக்க முடியும்? பரவாயில்லை”.
ராஜகோபால் ஆறுதலாகப் பேசினான். ஆனால் சுடலையால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மறுநிமிடம்.
ராஜகோபால், ஏ.எஸ். பெஞ்சமின், காசிராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
மூன்று பேருக்கும் விலங்குமாட்டி போலீஸ் ஜீப்பில் ஏற்றினார். போலீஸ் ஜீப் குலசேகரப்பட்டினம் நோக்கிக் கிளம்பியது.
25.09.1942
ஆர்.செல்லத்துரையைக் குலசேகரன்பட்டினம் போலீஸ் சுப்பாநாயக்கர் கைது செய்தார்.
08.11.1942
நாங்குநேரி உதவி போலீஸ் அதிகாரி ஆதிநாராயணதாஸ் மந்திரக்கோனைக் கோவில்பட்டியில் கைது செய்தார்.
இப்படியாக ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டாலும் மற்றவர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
முக்கியமான குற்றவாளிகள் கிடைத்துவிட்டார்கள்.
எனவே குலசேகரப்பட்டினம் மிகவும் பரபரப்பானது.
மற்றவர்கள் எப்படியும் சிக்கிக்கொள்வார்கள்.
ஊர் முழுவதும் தண்டோரா போடப்பட்டது.
நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு. இதனால் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், உப்பளத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த உப்பள மேலாளர் வில்பர்ட் துரையை ஒரு கும்பல் மறைந்திருந்து தாக்கியிருக்கிறது. அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டது. அவர்களில் ஐந்து பேர் போலீசிடம் பிடிபட்டுவிட்டனர். மீதிப் பேர் சரண்டராகிவிட்டால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால் அவர்களைச் சுட்டுப் பிடித்துவிடுவார்கள். அவர்களது சொத்து பறிமுதல் செய்யப்படும் எனத் தண்டோரா போட்டார்கள்.
மக்களோ வேதனைக்கு உள்ளானார்கள். ஏற்கனவே போலீஸ் தொந்தரவு தாங்க முடியவில்லை. மூன்று பேர் பிடிபட்டுவிட்டார்கள். மற்றவர்கள் பிடிபடவில்லை என்றால் என்ன ஆகும்? சும்மா இருக்கும் நம்மளையெல்லாம் நிம்மதியாக இருக்க விடுவார்களா?
அனைவருக்கும் பயம் கொடுத்தது.
“ஏடே, நம்ம பொண்டு பிள்ளையள, அப்புறம் ஆடு மாடுகளைப் பத்திரமா பாத்துக்கோங்கடே”.
தேரிக்காட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
தேரிக்காட்டில் யார் இருக்கிறார்? யார் அவர்களுக்குச் சோறு கொண்டுபோகிறார் என்றே தெரியவில்லை.
இந்த வேளையில்தான் இந்தப் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப் பேசவேண்டும்.
அந்த சம்பவம் நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கும் சம்பவமாகும்.

பள்ளிப்பத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாதன்கிணறு, செங்குழி, பூச்சிக்காடு பகுதியில் மட்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 41 பேர் இருந்துள்ளனர்.
நாதன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் நாராயண நாடார். இவர் பரம்பரை கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். இவர்களுக்கு ஆங்கிலேய அரசைப் பிடிக்கவில்லை. அரசுப் பணியாற்றியபோதும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தனர்.
நாதன்கிணறு அருகே பூச்சிக்காடும், செங்குழியும் உள்ளது. இதன் அருகேதான் குதிரைமொழித் தேரி உள்ளது. இந்த மூன்று ஊருக்கும் தேரியில் ஒளிந்துகிடக்கும் தியாகிகள் ஓடியே வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடலாம். எனவே தியாகிகளுக்குச் சாப்பாடு வழங்கும் இடமாக நாதன்கிணறு விளங்கியது.
நாராயண நாடார் வீட்டில் எப்போதுமே உலை எறிந்துகொண்டே இருக்கும். அவரது மருமகள் விஜயா. இந்தக் குடும்பத்தில் எல்லோருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
இந்த வீட்டில்தான் தேரியில் இருந்து பசியெடுத்தால் ஓடிவரும் தியாகிகளுக்கெல்லாம் சாப்பாடு இருக்கும்.
இதனால்தான் போலீசின் பார்வை சித்தன்விளையை நோக்கியது.
எப்படியும் தேரிக்குள் இருக்கும் கொலையாளிகள் வெளியே வருவார்கள். நாம் பிடித்துவிடலாம் எனத் திட்டமிட்டனர்.
சித்தன்விளை மீது அரசுக்குக் கோபம் உண்டு.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற மகாத்மா காந்தியின் கோஷம் இவர்களை உத்வேகப்படுத்தியது. இப்பகுதி இளைஞர்களுக்கு உற்சாகமாக இருந்தது. அந்த உற்சாகத்தின் காரணமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், சித்தன்விளை ஊரில் உணவு வழங்குபவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் வீறுகொண்டு எழுந்தனர்.
அந்தச் சமயத்தில்தான் கிராம முன்சீப் நாராயண நாடார் தலைமையில் கள்ளுக்கடை மறியல், கள்ளுக்கடைககுத் தீ வைத்து எரித்தல் போன்ற போராட்டம் நடந்தது.
தொடர்ந்து கள்ளு குடித்துவிட்டுக் கிராமத்திற்குள் வருபவர்களை மொட்டையடித்து “க” என எழுதி கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதை மேல் ஏற்றி ஊர்களில் ஊர்வலமாக வரவைப்பார்கள். இதனால் கள்ளுக்கடை உரிமையாளர் அப்பாத்துரை நாடார் போலீசில் புகார் அளித்தார்.
இதற்குக் காரணமானவர்களைக் கைது செய்தனர் போலீஸ். இந்த ஊரில் கள்ளுக்கடை மறியலில் இரண்டு மூன்று பேர் போலீசாருக்குச் சாதகமாக இருந்தார்கள். அதில் ஒருவர் ஜெபமணி நாடார். இவர்களின் ரகசியக் கூட்டம் தேரிக்காடு பகுதியில் அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவிலில் நள்ளிரவில் நடக்கும்.
அந்த மாதிரி கூட்டம் நடக்கும்போது, கிராம முன்சீப் நாராயண நாடாருக்கு ஆதரவாகச் சிலர் திரண்டனர். கள்ளுக்கடை மறியலில் போலீசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வேண்டும் என்ற நபர்களை இரவு 2 மணிக்கு மேல் அவர்கள் வீட்டில் தட்டி எழுப்பிச் சாட்சி சொல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதையும் மீறி ஜெபமணி நாடார் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.
ஊரே அவருக்கு எதிராகத் திரண்டு மிரட்டல் விட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அவர் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் ஊருக்குக் கட்டுப்பட்டுத் திரும்பி வந்துவிடுகிறார். அந்த அளவுக்கு ஊர் முழுக்கச் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர் சித்தன்விளை மக்கள். லோன்துரை கொலை வழக்கில் இந்த மூன்று ஊர்களைச் சேர்ந்தவர்களை ஊருக்குள் புகுந்து அடாவடியாகக் கைது செய்கிறார்கள் ஆங்கிலேய போலீசார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கொடுமையாக நடத்துகிறார்கள். அந்தச் சமயத்தில் இந்த மூன்று ஊர்களிலும் அனைவரின் வீடுகளிலும் கருப்பட்டி சேகரித்து வைத்திருப்பார்கள். அதையெல்லாம் போலீசார் தூக்கி எறிகிறார்கள்.
அந்த ஊரில் அனைத்துப் பகுதிகளிலும் ஓலைக்குடிசைகள்தான் அதிகமாக இருந்துள்ளன. அதையெல்லாம் பிரித்து எரிந்தார்கள் போலீசார். பனைநார் கட்டிலைக் கிழித்து எறிந்து நாசம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஆள் ஒளிவதுபோல் உள்ள மண்பாண்ட குலுக்கை எனும் நெல் சேகரிக்கும் பானையான குலுக்கையை உடைத்து எறிந்தனர். அதனுள் இருந்த நெல்மணிகளை வீதியில் வீசித் துவேஷம் செய்தனர். சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். இதனால் மிகவும் பின்னமாக்கப்பட்ட ஊர் நாதன்கிணறு.
குரும்பூர் ரயில் நிலையம் போராட்டக்காரர்களால் தாக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சர்க்கார் காடுகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அழிக்கிறார்கள். அதற்கு யார் மேல் குற்றம் சுமத்த வேண்டும் என்று தெரியாமல் போலீஸ் திணறியது. நாலுமாவடி, அங்கமங்கலம், புறையூர், ஆறுமுகநேரி, பூச்சிக்காடு, நாதன்கிணறு, செங்குழி, குரங்கணி ஆகிய எட்டு ஊர்களைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கிறார்கள். இந்தத் தொகையை ஊர் ஒட்டுமொத்தமாகக் கட்டாயப்படுத்தி வசூலிக்கிறார்கள். இந்தத் தொகை சுதந்திரத்திற்குப் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படுகிறது. இந்தச் செய்தி மிகவும் முக்கியமானதாகும்.
இதனால் சித்தன்விளை மீது ஆங்கிலேய அரசுக்குக் கோபம் பயங்கரமாக இருந்தது.
எனவே போலீசார் சித்தன்விளையை ஒரு கண் வைத்தனர்.
(குலசேகரப்பட்டினம் கொலை வழக்கு தொடரும்)


