149. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
– முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நாட்கள் சில நகர்ந்தது. இந்நிலையில் மருகால்தலை மலைஅடிவார பகுதிக்கு மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனை பசு மாடுகள் வந்தன. அதில் ஒரு பசு மாடு தினமும் மலையேறியது. அங்கு மணியாச்சி மக்கள் வைத்து விட்டு சென்ற சாமி சிலை மேல் பாலை தானே சொரிந்தது.
வாரம் ஒன்று கடந்தது. இந்நிலையில் பால் கறக்கும் கோனார் அதிர்ச்சி அடைந்தார். எப்படி இது நடக்கிறது. காலையில் பால் கறக்கும் பசுமாடு மாலையில் பால் கறக்கவில்லையே ஏன் என்று தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.
எனவே அவர் அரண்மனைக்காரரிடம் சென்றார். ‘அய்யா குறிப்பிட்ட அந்த பசுமாடு மட்டும் காலையில் பால் கறக்கிறது. மாலையில் மடுவில் பால் இல்லை. என்ன ஏது என்று தெரியவில்லை’ என்று கூறினார். அப்படியென்றால் அந்த மாட்டை கண்காணிக்க வேண்டும். அந்த மாட்டிலிருந்து யாரோ பாலை கறக்கிறார்கள். அல்லது மாடு மேய்க்கும் யாரோ ஒருவர் கள்ளத்தனமாக பாலை கறந்து வியாபாரம் செய்கிறார்கள். யார் அவர்? அரண்மனை மாடு என்று தெரிந்தும் களவாடும் அந்த கயவன் யார்? என்று திருடனை கண்டு பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக ஐந்து நபர்களை நியமனம் செய்கிறார்கள். அந்த ஐந்து பேர் ஆங்காங்கே நின்று பசுமாட்டை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று வழக்கம் போல அந்த பசுமாடு மலை அடிவாரத்துக்கு வந்தது. அதன் பின் ஒரு துள்ளலில் மலை உச்சிக்கு ஓட்டம் ஓட்டமாக ஓடியது. அதை கண்காணித்த வரும் பின்னாலேயே ஓட ஆரம்பித்தார். மலை மேலே போய் பார்த்த பிறகு அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
அங்கு உள்ள சாஸ்தாவின் சிலைக்கு அந்த பசு பால் சொரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மற்றவர்களும் அங்கே ஓடிவந்தனர். அதோடு மட்டுமல்லாமல் மாடு மேய்த்தவர்களும் அங்கே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தினை அனைவரும் பார்த்து வியப்புற்றனர்.
இந்த தகவலை உடனே அரண்மனைக்காரரிடம் ஓடிப்போய் தெரிவிக்கின்றனர். மறுநாள் அவரும், ஊராரும் திரண்டு வந்து பார்க்கின்றனர். அவர்களுடன் சிலையை கொண்டு வந்த ஏழு பேர்களும் அங்கு வந்து விட்டனர். தாங்கள் விட்டு விட்டு சென்ற சிலையை பார்க்கின்றனர்.
பசுவின் செயலும் சாமி சிலையின் மகிமையையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். இந்த சமயத்தில் தான் கூட்டத்தில் அருள் வந்து ஆடினார் ஒருவர். தான் சாஸ்தா என்றும், எனக்கு இங்கே பூரண, புஷ்கலையுடன் சிலை அமைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்றும், எனது கோட்டைக்கு காவலாய் பேச்சி, மலையழகு (பிரம்மசக்தி) சிவனணைந்த பெருமாள், கருப்பன், கொம்புமாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும்’ என்று அருள்வாக்கு கூறினார்.
அதன்படியே மணியாச்சி அரண்மனை சார்பில் ஜமீன்தார் கோயிலை எழுப்பினார். பூலாத்தி செடிகளிடையே இருந்து எடுத்து வரப்பட்டதால் அவருக்கு ‘பூலா உடையார் சாஸ்தா’ என்று பெயர் வைத்து அழைத்தனர். இதுவே மருவி பிற்காலத்தில் பூலுடையார் சாஸ்தா என்று அழைக்கப்பட்டது.
மணியாச்சி அரண்மனை ஆளுகைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த பலதரப்பட்ட சமுதாய மக்களும் பூலுடையார் சாஸ்தாவை தங்கள் குலதெய்வமாக வணங்க ஆரம்பித்தனர். நாளடைவில் இந்தப் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் வாழையடி வாழையாக தங்கள் குலதெய்வமான பூலுடையார் சாஸ்தாவை குடும்பத்துடன் வந்து வணங்கி வருகின்றனர்.
மேலும் சாமி சிலை மீது பசுமாடு பால் சொரிந்து மலைப்பாறையில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றி விடப்பட்டு அந்த இடத்தில் பால் வடிந்த மாதிரியான காட்சியை தற்போதும் காணலாம்.
மேலும் சுரைக்கொடி பற்றி இரு விதமான தகவல்கள் சொல்லப்படுகிறது. துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க இந்த ஏழு பேருக்கும் சுரைக்கொடி உதவியதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று சாமி சிலையை தூக்கி கொண்டு வரும்போது சுரைக்கொடி தட்டி விட்டு சாமி சிலை சேதம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் மக்கள் வாழையடி வாழையாக சுரைக்காயை சமைத்து உண்பதில்லை என்ற விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.
மேலும் இக்கோயிலின் தல விருட்சமான புளியமரத்திலிருந்து வருடத்திற்கு ஒரே ஒரு பூ பூத்து அது பிஞ்சாகி காயாகி பழமாகி அதை பறித்து தான் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பானகம் கரைத்து சாமிக்கு நிவேதனம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இத்திருக்கோயில் பூசாரிகள் ஆறுபேரில் வாரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் தினந்தோறும் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு செம்புக்குடத்தில் புனித நீர் எடுத்து தலையில் வைத்து கால்நடையாக நடந்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த அபூர்வ கோயிலில் புத்ரபாக்யம் வேண்டி ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் மாதாந்திரம் தொடர்ந்து வந்து சாஸ்தாவிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளும் தம்பதியருக்கு புத்ரபாக்யம் கிடைக்கிறது.
இத்திருக்கோயிலில் சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாளன்று பங்குனி உத்திர பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவில் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் அனைத்து மக்களும் தவறாமல் குடும்பத்துடன் வந்து தங்குகிறார்கள். சாமிக்கு பொங்கலிட்டு காவல் தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி சாமி கும்பிடுகிறார்கள். ஒருநாள் கோயிலில் தங்கி உணவு சமைத்து உண்டுவிட்டுதான் தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர். பங்குனி உத்திரம் முடிந்து எட்டாம் கொடை சிறப்பு பூஜை வழிபாடுகள், புரட்டாசி கடைசி சனி சிறப்பு பூஜை வழிபாடுகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடுகள், திருக்கார்த்திகை அன்று மலைமீது மகாதீபம் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடுகள் போன்ற விசேஷ வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.
இன்று பொதுமக்களே தலைவர் ஒருவரை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். மணியாச்சி ஜமீன்தார்கள் தான் இந்த கோயிலை அமைத்தவர்கள் என்பதால் அவரது வாரிசுகள் தற்போதும் இக்கோயிலுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.
எப்படி?
(இன்னும் வருவார்கள்)