148. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
-முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நாங்கள் மணியாச்சி ஜமீன் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா வீட்டுக்கு நுழைந்தவுடனே இன்முகத்துடன் வரவேற்றார். எங்களை அவரது மாடியில் உள்ள வரவேற்பு அறைக்கு கூட்டிச்சென்றார்.
சிரித்த முகத்துடன் எங்களிடம் பேச ஆரம்பித்தார். ‘அய்யா, மணியாச்சி ஜமீன் மிகப்பெரிய ஜமீன் ஒரு காலத்தில் எங்கள் ஜமீன்தார் ஆங்கிலேயருடன் ஒத்து போகாத காரணத்தினால் ஜமீன் சுருங்கி விட்டது’ என்றார்.
இனி என்ன அவருடைய உரையாடைலை வைத்துக் கொண்டே நமது கட்டுரையின் வரலாற்றை தொடர்ந்து கூறலாம்.
மணியாச்சி.
இந்த பெயர் விளங்க காரணமே ஜமீன்தார் தான். எப்படி?
ஜமீன்தாரின் சின்னம் மணி. மணி சின்னத்துக்கு சொந்தமான ஜமீன்தார் ஆட்சி செய்யும் இடம் தான் மணியாச்சி ஜமீன். என்று ஜமீன்தார் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா எங்களிடம் கூறியவுடனே ஆகா.. என சபாஷ் போட வைத்தது. இந்த வழியாக இரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம். ‘மணி ஆச்சி… சீக்கிரமா வண்டியை எடுங்க’ என்று சொல்வது நினைவு வந்தது. அதனால் தான் இந்தபெயர் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ஜமீன்தார் கூறியவுடனே உண்மை நிலை புரிந்தது.
அப்படியென்றால் மிகவும் பழமையான ஜமீன் மணியாச்சி ஜமீன்தார் தான்.
பாளையக்காரர்கள் உருவாகத்தின் போது தென்னகத்தில் 72 பாளையங்களுள் இதுவும் ஒன்றாகவே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். அதில் முக்கிய மறவர் ஜமீனில் மணியாச்சி ஒன்றாக விளங்கியுள்ளது. பாளையத்தில் கொண்டயங்கோட்டை மறவர்கள் 8 பேர் ஆண்டு வந்தனர்.
அவர்கள் ஊத்துமலை, மணியாச்சி, கடம்பூர், நெல்கட்டும் செவல், சுரண்டை, நடுவக்குறிச்சி, சொக்கம்பட்டி, தலைவன் கோட்டை ஜமீன்தார்கள் ஆவார்கள். இவர்களில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்களில் மணியாச்சி ஜமீன்தாரும் ஒருவர்.
இவர்களின் பணி, வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்தி விட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்வதே. ஆனால் அதையும் தாண்டி மக்கள் நல்லாட்சியில் சிறப்புற்று விளங்கினார்கள் மணியாச்சி ஜமீன்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இறை பணியிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
மணியாச்சி ஜமீன்தார்கள் பூலோகபாண்டிய தலைவன் என்ற பெயரிலேயே விளங்கியுள்ளனர். ஒரு தலைமுறையினர் இந்த பெயரில் விளங்கினார்கள் என்றால் அடுத்த ஜமீன்தார் சுப்பிரமணிய பாண்டிய தலைவர் என்று பெயர் பெற்று விளங்கியுள்ளார்.
ஜமீன்தாரின் எல்கை வடக்கே ஏழாயிரம் பண்ணையில் இருந்து துவங்கியுள்ளது. மேற்கே மருகால்தலை, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரை, கிழக்கே குறுக்கு சாலை, தெற்கே திருச்செந்தூர் கடல் வரை இவரது ஆட்சி எல்கை இருந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மணியாச்சி ஜமீன்தார் வரலாறோடு இணைந்து சீவலப்பேரி மறுகால்தலை மலைக்கோயிலான ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயில் தல வரலாறாக மிளிர்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஆப்பநாடு பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தான் மணியாச்சி ஜமீன்தார். அவருடன் இந்த பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் பலர். இதில் ஏழுபேர் தொழில் நிமித்தமாக தென்திசை நோக்கி சென்றனர். சரியான தொழில் கிடைக்காத காரணத்தினால் மலையாள தேசம் செல்கின்றனர்.
பல இடங்களில் தொழில் செய்கிறார்கள். அங்கிருந்து பொருள் ஈட்டி புறப்படும் தருவாயில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் இவர்களை திருடர்கள் என நினைத்தனர். இவர்களை தாக்கி பொருட்களை மீட்க முற்படுகின்றனர்.
உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் விடவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு இவர்களை துரத்தினர். இவர்கள் அப்பகுதியில் ஓங்கி உயர்ந்த அடர்த்தியாய் வளர்ந்து நின்ற பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைவாக பதுங்கி கொள்கின்றனர்.
துரத்தி வந்தவர்கள் புதர் அருகே வந்து பார்க்கின்றனர். யாருடைய தலையும் தென்படவில்லை. அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்க துரத்தி வந்தவர்கள் பயந்து திரும்பி ஓடி விடுகின்றனர்.
புதர் மறைவில் பதுங்கியிருந்த ஏழுபேரும் வெளியே வந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடும் போது அவர்கள் கண்ணில் பச்சை மண்ணால் செய்த சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த யானை வாகனத்தான் சாஸ்தா தான் நம்மை காப்பாற்றினார். ஆகவே இந்த சாஸ்தாவை நமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர்.
அந்த சிலையை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர். மலையாள தேசத்தில் இருந்து நாகர்கோயில் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுது உண்ணாக்குடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு வருகின்றனர்.
அங்கு சிலையை இறக்கி வைத்து விட்டு உணவு சமைத்து உண்கின்றனர். உண்டு களித்து ஓய்வு எடுத்தனர். அதன்பின் மீண்டும் பயணத்தை தொடர சிலையை எடுக்க முற்பட்டனர். அப்போது சிலையின் கால் பாதம் பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது. பாதம் உடைந்த சிலையோடு பயணத்தை தொடர்ந்தனர்.
அடுத்த வேளை உணவுக்காக தென்திருப்பேரை அருகிலுள்ள கடம்பாகுளம் கரையில் சிலையை இறக்கி வைக்கின்றனர். உணவு சமைத்து உண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அதன்பின் சிலையை எடுக்கும் போது சிலையின் இடுப்புக்கு கீழ்பகுதி பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது.
சிலையின் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். சீவலப்பேரி மறுகால்தலை மலைப்பகுதிக்கு வந்துச் சேர்கின்றனர். உடைபட்ட சிலையை ஊருக்குள் கொண்டு போக வேண்டாம் என நினைத்தனர். எனவே மலை மேலுள்ள பாறை மீது வைத்து விட்டு ஏழுபேரும் தங்கள் ஊரான மணியாச்சிக்கு சென்று விட்டனர்.
நாட்கள் சில நகர்ந்தன. இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனையை சேர்ந்த பசுமாடுகள் வந்தன.
அதில் ஒரு பசு மாடு செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது.
( இன்னும் வருவார்கள்)