மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு. கட்டண வசூல்தான். காருக்கும், சுற்றுலாபயணிக்கும் , கேமராவுக்கு கட்டணம் உண்டு. எப்போது நினைத்தாலும் கூட நாம் அங்கு சென்று குளித்து மகிழலாம். ஆனால் அதையும் தாண்டி மணிமுத்தாறு தலை அருவியை பார்த்து இருக்கீறீர்களா. சுமார் 500 அடி உயரத்தில் ஆர்பரித்து கொட்டும் இந்த அருவியில் சப்த கன்னிகளுக்கு பூஜை நடப்பதாகவும், அந்த சமயத்தில் சிறப்பு அனுமதி பெற்று மழை வேண்டி அங்கு பூஜை நடப்பதாகவும் சிங்கம்பட்டி ஜமீன் தலைமை காரர் அய்யா ராட்ஷசமுத்து பாண்டியன் என்ற கட்டபொம்மன் கூறியவுடன் உடனே கிளம்பி விட்டேன் காரணம் அத்திபூத்தவாறு எப்போதாவது ஒரு முறைதான் இங்கு பூஜை நடைபெறும். இரவு வனத்தில் தங்க அனுமதி உண்டு. வனத்துறை அனுமதியும் அவர்களின் காவலோடு உண்டு.
நேற்று முன்தினம் காலை துவங்கிய இந்த பயணத்தில் மாஞ்சோலை காவல் சரகம் ஆரம்பிக்கும் இடத்தில் தலையணை நோக்கி பயணம்செய்து, பின் கருத்தாச்சி குச்சில், கீழகண்டம்பாறை, மேலக்கண்டம் பாறை, சுரைக்காய் தட்டை பாறை வழியாக மிக கடினமான பயணம். மூன்று இடத்தில் மணிமுத்தாறு ஆற்றை கடந்தோம். மிக கடினம், பாறையில் விழுந்து, எழுந்து பின் நடந்து, பல இடங்களில் சருக்கி, சில நேரங்களில் முட்டு ஏத்தத்தில் ஏற முடியாமல் ஏறி… அப்பப்பா… ஒரு ஐந்து மணி நேரத்தில் திக். திக் ..பயணம். இறுதியில் தலை அருவியை அடைந்தோம். அதை ஆச்சரியத்தோடு பார்த்தோம். ஆக..£ வெள்ளி உருக்கி விட்டாற் போல அந்த அருவி.. இதுவரை நெல்லை மாவட்டத்தில் நான் இதுபோல ஒரு அருவியை கூட பார்க்க வில்லை.
1992 வெள்ளத்துக்கு முன்பு வரை பல பாறை வழியே விழுந்த இந்த நீர் வீழ்ச்சி, தற்போது ஓங்கி ஒய்யராமாய் 500 அடிகளில் மேலிருந்து விழுகிறது. இங்கு தான் அருவிதலை பூஜை நடந்தது. பூஜை நடக்கும் போதே மழை பெய்தது. நனைந்து கொண்டே பூஜையை பார்த்தோம். சிலர் முன்னேற்படாக பிளாஸ்டிக் தாள் கொண்டு வந்தார்கள். அதையும் தாண்டி எங்களை நனைத்தது மழை. ஓ… வென இறைச்சல் தந்த அருவியும் எங்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மழை பெய்த பின்பு வழி நெடுக்க சேரும் சகதியுமாய் புரண்டு, சருக்கி, தாழ்வாரம் என்ற இடத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்தோம். இரவு முழுவதும் சொட்ட சொட்ட மழையில் நனைந்து பின் அங்கே அன்னதானம் சாப்பிட்டு, காலையில் ஆட்டு கரி சாப்பாடு சாப்பிட்டு, மீண்டும் சருக்கி, விழுந்து, மதியம் வீடு வந்து சேர்ந்தோம். மறக்க முடியாத அனுபவம்.
நெல்லை முத்தமிழ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு ஆவணப்படமாக தயாரிக்க ஏற்பாடு செய்தார்கள். இதற்கு உதவியாக கமராவை தம்பி சுடலை மணி செல்வன் கையாண்டார். நாங்கள் விழுந்தால் தாங்கி பிடிக்க தம்பி ஆறுமுக பெருமாள், பயணம் சோர்வு தட்டாமல் ஆங்காங்கே சிரிப்பு காட்ட பேரன் திருப்பதி. பயணம் சிறப்பாகவே இருந்தது. இதன் முழு வரலாறு.. ஒரு நூலில் சிறப்பாய் வெளியாகும். ஏற்பாடு செய்த சிங்கம் பட்டி ஜமீன்தாருக்கும் உதவியாளர் கிட்டு அவர்களுக்கும், தலைமை காரர் ராட்சச முத்து பாண்டியன் என்ற கட்டபொம்மன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி.