
முக்காணியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே முக்காணி தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடப்பதாக ஆத்துார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை ஆத்துார் இன்ஸ்பெக்டர் விஜயகுமுார், எஸ்.ஐ.க்களான பச்சமால், மகேஷ்வரராஜ் மற்றும் போலீசார் முக்காணி ஆற்றுப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பியோடியது. இதில் முக்காணி மேலுாரைச் சேர்ந்த மணியாரன் மகனான மூக்காண்டி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முக்காணி பஞ். முன்னாள் தலைவரான பழையகாயல் சின்னமணி என்ற மாடசாமி மகன் நாராயணன், முக்காணி ரவுண்டானா ராமசாமி மகன் கனகராஜ், முக்காணி ராகவேந்திரன் மகன் காசிராஜன், முக்காணி மேலுார் மாரியப்பன் மகன் இசக்கி மற்றும் அடையாளம் தெரியாத ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது மணல் கடத்தல் கும்பல் பயன்படுத்திய 2 மினி லாரிகள், ஒரு ஸ்கார்ப்பியோ கார், 2 மோட்டார் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மணல் திருட்டு சம்பவம் தொடர்பாக ஆத்துார் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.