தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் , சீதா லெட்சுமி அம்மன் சமேத பூமி ஆளும் பெருமாள் மற்றும் உச்சினிமாகாளி அம்மன் கோயில் மகா கும்பாபிசேகம் நடந்தது. கடந்த 14 ந்தேதி மங்கள இசையுடன் இவ்விழா காலை 6.30 மணிக்குத் துவங்கியது. தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், கோ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமி ஹோமம், லெட்சுமி குபேர பூஜை தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்குப் புங்கமுடையார் சாஸ்தா கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 12 மணிக்கு கள்ளாண்டராமர் சுவாமி மற்றும் பத்ரகாளி அம்மன் கோவிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மாலை 4 மணிக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கும்பம் ஏற்றப்பட்டது. அதன் பின் கடஸ்தாபனம், தோரண பூஜை, மண்டப பூஜை , வேதிகா பூஜை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 15 ந்தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு 7 மணிக்குத் திருவிளக்கு பூஜை, தொடர்ந்து யந்திர நிறுவனம் நடந்தது. 16 ந்தேதி காலை 6.30மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 9 மணிக்கு கடம் எழுந்தருளி விமானத்திற்குக் கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர், சீதாலட்சுமி அம்மன் சமேத பூமி ஆளும் பெருமாள் மற்றும் உச்சினிமாகாளி அம்மன் மகா கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம் , விசேஷ அலங்கார தீபா£தனை நடந்து, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணக்கரை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


