பொதிகை மலை செல்ல மே மாதம் வரை பேக்கேஜ் மூலமாக பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதிகை மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1890 அடி உயரம் கொண்டது. அகத்திய முனிவர் தவம் செய்த இடமான அகத்தியர் கூடத்துக்கு வருடந்தோறும் கேரள அரசு அனுமதி அளித்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை தினமும் 100 யாத்திரியர்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதற்காக ஆன் லைன் மூலம் பதிவு துவங்கி 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இல்லை, ஒன்று முதல் ஐந்து நபர் கூட்டி செல்லும் குழுவினருக்கு 30 ரூபாய் கட்டணமும், பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கூட்டிச் செல்லும் நபர்களுக்கு ரூபாய் 40 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 10பேருக்கு மேற்பட்டவர்கள் குழுவாக வந்தால் அவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும் என அறிவித்து இருந்தனர்.
இதற்கிடையில் காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த முன் பதிவில் 33 நாள்களுக்கும் 3300 பேர் முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். 12 மணி முடிவதற்குள்ளேயே அனைத்து தேதிகளிலும் பதிவு செய்யப்பட்டு விட்டது.
கடந்த பிப்ரவரி 13 ந்தேதியோடு பயணஅனுமதி முடிந்து விட்டது. இதில் பலர் முயற்சி செய்தும் பொதிகை மலை செல்ல இயலவில்லை. இவர்கள் வசதிக்காக மே மாதம் வரை பேக்கேஜ் வசதியை வருடந்தோறும் கேரள வனத்துறை செய்து தருவார்கள். இந்த வருடமும் அதுபோன்று பக்தர்களுக்கு வசதி செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருடந்தோறும் பொதிகை மலை சென்று வரும் யாத்திரிகர் ராமையன் பட்டியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் கூறும் போது, நாங்கள் ஒரு குழுவாக பொதிகை பயணம் ஆண்டு தோறும் சென்று வருகிறோம். இந்த ஆண்டு ஆன் லைன்மூலமாக பதிவு செய்ய மூன்று இடங்களில் இருந்து முயற்சி செய்தோம். ஒரே நேரத்தில் கேரளா, தமிழ்நாடு உள்பட பல இடங்களில் இருந்து பக்தர்கள் முன்பதிவு செய்த காரணத்தினால் வெப்சைட் மிகவும் பிசியாக இருந்தது. 11.45 மணிக்குள்ளே முழுவதுமாக முன்பதிவு முடிந்து விட்டது. என்னை போன்ற லட்சகணக்கான பக்தர்கள் டிக்கட் கிடைக்கும் என நினைத்து ஏமாந்து போய் விட்டோம். எனவே பேக்கேஜ் முறையில் மே மாதம் வரை பொதிகை மலை செல்வதற்கு வசதியை கேரள வனத்துறை எங்களுக்கு அனுமதி தரவேண்டும் என்று அவர் கூறினார்.
பொதிகை மலை குறித்து தற்போது ஊடகங்களும் சமூக வளைத் தலங்களும் அதிகமான செய்திகளை வெளியிட்டு, சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை என கூறுவதால் இங்கு செல்ல பக்தர்கள் அலைமோதுகிறார்கள். ஆனாலும் கடந்த வருடத்தினை விட இந்த வருடம் அனுமதி நாள்களை குறைத்து விட்டனர். இதனால் தான் அதிக பக்தர்கள் முன்பதிவு கிடைக்காமல் ஏமாற வேண்டியது உள்ளது எனவே பேக்கேஜ் வசதி மூலம் மே மாதம் வரை பக்தர்கள் செல்ல வசதி செய்துதரவேண்டும் என யாத்திரியர்கள் விரும்புகிறார்கள்.