தூத்துக்குடி மாவட்டத்தில் பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகளை நட விரும்பும் சத்துணவு மைய நிர்வாகிகள் தோட்டக்கலைத் துறையை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் (2017-18) தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் தோட்டக் கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக ரூ.75,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீத மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கனிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடவசதியுள்ள சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 1492 சத்துணவு மையங்களுக்கு 7460 பப்பாளி மற்றும் 2984 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.
முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள சத்துணவு மையங்கள் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.