நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2 –
– முத்தாலங்குறிச்சி காமராசு
1.வைகாசி விசாகத்தில் பிறந்த தாமிரபரணி
தாமிரபரணியில் புஷ்கர திருவிழா. 144 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற மகா புஷ்கரம் வருகிற அக்டோபர் மாதம் குருபெயர்ச்சி திருவிழாவை முன்னிட்டு தாமிரபரணியில் நடைபெறுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து மக்கள் தாமிரபரணியில் கூடும் அற்புத திருவிழாவாக இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்த அருமையான திருவிழாவில் உயிர் நதியான தாமிரபரணியை சாக்கடை இல்லா நதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கையுடன் நமது தொடரை ஆரம்பிப்போம்.
தண்ணீரே அனைத்து தேவதைகளும் ஒப்பிடாக அழைக் கப்படுகிறது என வேதங்கள் கூறுகின்றன. ‘ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறது குறட்பா. மழையால் உண்டாகும் நீரின் ஒரு உருவம் நதி. நாகரிகத்தை வளரச் செய்வது நதிதான். நதியை கொண்டாடுவது நாகரிகத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
கங்கையில் தோன்றியதால் முருகனுக்கும், பீஷ்மருக்கும் ‘காங்கேயன்’ என்று பெயர் உண்டு. ஸ்ரீ ராமன் என்றால் சரயூ நதியும், கிருஷ்ணன் என்றால் யமுனா நதியும் நினைவுக்கு வருகிறது. கடவுளார் களின் வாழ்வியலோடு கலந்தது நதிதான்.
வியாச முனிவர் நாரதரால் தூண்டப்பட்டு ஸ்ரீமத் பாகவதத்தை சரஸ்வதி நதிக்கரையில் வைத்து தான் எழுதினார். தமஸா நதிக்கரையில் ஆதி காவியமான ராமாயணம் வால்மீகி முனிவரின் மனதிலிருந்து தோன்றியது.
ஆகவேதான் மகாகவி பவபூதி தன்னுடைய உத்தர ராமசரிதம் எனும் நாடகத்தில் தமஸா, கோதாவரி, சரயூ, கங்கா ஆகிய நதிகளை நாடகக் கதா பாத்திரங் களாக உருவகப் பத்தியுள்ளார். கவிசக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியாரும் நதிக்கரையில் தோன்றியவர்களே.
எல்லா நதிகளிலும் சிறப்பு வாய்ந்தது, தென்பொருனை நதியாகிய தாமிரபரணி. புறநானூறு முதலிய சங்க நூல்களிலும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங் களிலும் இந்நதி பெருமையுடன் பேசப்படுகிறது. ‘தட்சண கங்கை’ , ‘மாலா மாதா’ எனவும் போற்று கிறார்கள் தாமிரபரணி நதியை.
மகாபாரதத்தில் வியாச முனிவர் தாமிரபரணி நதிக்கரையை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், வருணன் போன்ற கடவுள்கள் தவம் செய்ய தகுதியான இடமாக ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
ராமாயணத்திலோ இந்நதி ‘மகாநதி’ என்று குறிப்பிடப்படுகிறது. .
வால்மீகி விசாகா நட்சத்திரத்தை ரகுவம்சத்தின் குல நட்சத்திரமாகக் குறிப்பிடுகிறார். தாமிரபரணி நதி பரணி என போற்றப் பட்டாலும் வைசாகி விசாகா நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்று தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்படுகிறது.(மே 28 ல் வைகாசி விசாகம் வரவுள்ளது. இந்த நாளில் தாமிரபரணிக்கு கடந்த 20 வருடங்களாக பூஜை செய்து வருகிறோம். இந்த ஆண்டும் கருங்குளத்தில் தாமிரபரணி கரையில் வைத்து பூஜை நடைபெறும்) எனவே தான் வைகாசி விசாகம் இங்கு பெருமையாக போற்றப்படுகிறது. இந்நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில் முழ்கி தனது இழந்த செல்வத்தினை மீட்டார். நம்மாழ்வார் பிறந்தது இத் தினத்தில்தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது.
ரகுவம்ச மகா காவியத்தில் காளிதாசர் ரகு மகாராஜனுக்கு பாண்டிய மன்னர்கள் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் கிடைக்கும் விலையுயர்ந்த முத்துக் களை சமர்ப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.
திருமலை நாயக்கர் மன்னரின் மந்திரியாக பணியாற்றி தாமிரபரணி ஆற்றங்கரையில் சமாது நிலை அடைந்த, நீலகண்ட தீட்சிதரோ, ‘மீன்களையும், தவளை களையும் கொண்டு சமுத்திரத்தை நிரப்பும் மற்ற நதிகளைப்போல் தாமிரபரணி இல்லை. ரத்தினங் களையும், முத்துக் களையும் கொண்டு சமுத்திரத்தில் சேர்த்து சமுத்திர ராஜனுக்கு ‘ரத்னாகரன்’ என்ற பெயர் ஏற்படுத்தி கொடுத்த நதி’ என புகழுகிறார்.
முத்துக்கும் சிப்பிக்கும் பெயர் பெற்ற இந்நதியின் கரையில் தான் பெருமை வாய்ந்த பாண்டிய மன்னர்களின் பழமை வாய்ந்த தலைநகரமான மணலூர் (கொற்கை) இருந்துள்ளது. இந்நதியின் கரையில் தான் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் (மேலச்செவல்) நிகழப்போகிறது. முறப்பநாட்டில் தனது பக்தைக்கு 10 அவதாரத்தினை காட்டிய ஸ்ரீஅஞ்சேல் பெருமாள் கோயிலும் உள்ளது.
நமது தொடரில் நதிக்கரையை ஒட்டியுள்ள அனைத்து சேத்திரங்களும், தீர்த்த வைபவங் களும் பெருமையுடன் வர்ணிக்கப் போகிறோம். இதற்காக நதிக்கரை வழியாக நடந்து வரப்போகிறோம். இந்த நதியில் ஸ்நானம் செய்வதால் புனித மடைகிறார்கள் இப்பூவுலகில் வாழும் மனிதர்கள். இவ்வுடல் வீழ்ந்தபின் யமலோகத்தில் வேதனையை அனுபவிக்க வேண்டிய வர்களாக இருந்தாலும் கூட, இந்நதியில் நீராடினால் மிகுந்த சுகத்தை அடைவதாக கூறப்படுகிறது.
இதனால் யமதர்மராஜனே, தாமிரபரணி நதியின் மகிமையே போற்றி அவளை துதிக்கிறான். இந்த துதியானது உலகில் ‘யமகீதை’ என்று போற்றப்படுகிறது.
தாமிரபரணி நதியின் ஓட்டத்திலே 40 விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. போக, கர்ம மற்றும் ஞான சேத்திரங்கள் என்று மூன்று விதமாக வர்ணிக்கப்படுகின்றன. போக சேத்திரங்களில் முனிவர்கள் தவம் செய்து அதற்கான பலன்களை அனுபவிக்கிறார்கள். கர்ம சேத்திரங்களில் விதிமுறைப்படி யாகங்கள் செய்யும் முனிவர்கள் அஷ்ட சித்திகளை அடைகிறார்கள். ஞான சேத்திரங்களில் மிகுந்த சாந்தமுடைய முனிவர்கள் தியானத்தின் மூலம் சமாதி நிலையை அடைந்து எப்போதுமே இறைவனை ஆராதனை செய்து மோட்சத்தை அடைகிறார்கள். இதுபோலவே தாமிரபரணி நதி பலவிதத்திலும் போற்றப்படுகிறது.
இத்தகைய கீர்த்தி வாய்ந்த தாமிரபரணி நதியின் பெருமையை சைவ புராணம் விளக்குகிறது. சைவ புராணத்தின் இந்த பகுதி
‘தாமிரபரணி மகாத்மியம்’ என போற்றப்படுகிறது. இதுபோன்ற தாமிரபரணி மகாத்மியம் நூல்கள் பலராலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த பகுதியில் உள்ள மற்ற வரலாறுகள் தாமிரபரணியில் இதுவரை எழுதப்படவில்லை. அதற்காகத்தான் நம்தொடரில் பயணிப்பு. இந்த தொடரில் கோபாலசமுத்திரத்தில் இருந்து கடலில் நதி சேரும் புன்னக்காயல் வரை நடந்து சென்றே ஒவ்வொரு ஊரை பற்றியும் எழுதப்போகிறேன்.
1998 ஆம் ஆண்டு நான் ‘நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 1’ தொடரை எழுதும் போது நதி குறித்த எந்தவொரு நூலும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் 20 வருடங்களில் பல நூல்கள் தாமிரபரணியை பற்றி வெளி வந்து விட்டது. பல ஊர்களில் சிறு சிறு துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்த ஊரில் உள்ள வரலாறுகளை பலர் எழுதி வைத்துள்ளார்கள். பலர் தனது பகுதியை பற்றி நாள் கணக்காக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இவையெல்லாம் அச்சில் ஏறாமலேயே உள்ளது. நமது முன்னோர்கள் மனதில் உருவாக்கி வைத்த பொக்கிஷ விஷயங்கள் எல்லாம் நமக்கு தற்போது சிறப்பாக கிடைத்து வருகின்றன. ஆகவே இந்த நூல் மிக சுவராஸ்யமாக செல்லும் என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு.
சரி… தொடரில் முதல் கட்டமாக… புஷ்கர திருவிழா .. புஷ்கர திருவிழா என கூறுகிறோமே..
அது என்ன திருவிழா-?
(நதி வற்றாமல் ஓடும்)