செய்துங்கநல்லூர் அருகே உள்ள தென்திருப்பதி என்று போற்றப்படும் கருங்குளம் வகுளகிரி சேத்திரத்தில் இருக்கும் வெங்கிடாசலபதி கோயிலில் சித்திரா பௌர்ணமி விழா மிகசிறப்பு பெற்றதாகும்.
இந்த விழாவை முன்னிட்டு 21 ந்ததி தேங்காய் சாத்தி பந்தல் கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் தினமும் அவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். முதல் நாள் இரவு தோளுக்கினியான் வாகனத்திலும், 2ம் திருநாளில் சிம்ம வாகனத்திலும், 3 ம்நாள் ஆஞ்சநேயர் வாகத்திலும் 4 ம் திருநாளில் சேஷ வாகனத்திலும், 5ம் திருநாள் கருட வாகனத்திலும், 6 ம் நாள் திருவிழாவில் யானை வாகனத்திலும், 7 ம் நாள் திருவிழாவில் பொன் சப்பரத்திலும், 8 ம் நாள் திருவிழாவில் குதிரை வாகனத்திலும் 9 ம் நாள் திருநாளில் தவழ்ந்த கிருஷ்ண திருக்கோலத்தில் பல்லக்கிலும் உத்தசவர் ஸ்ரீனிவாசர் கோயிலை வலம் வந்தார்.
10 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு 29ந்தேதியான நேற்று காலை 8 மணிக்கு உத்சவர் தயாருடன் பல்லக்கில் எழுந்தருளி புதுமண்டபம் சேர்ந்தார். அதன் பின் 10 மணிக்கு வெங்கடாசலபதி பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஸ்ரீனிவாசருக்கு நவ கலச திருமஞ்சனம் திருவாராதனம் கோஷ்டி நடந்தது. இரவு 11 மணி அளவில் உத்சவர் ஸ்ரீனிவாசர் பொன்னிற சப்பரத்தில் மலையிறங்கினார். பின் பெருமாள் கோயிலில் வந்து தன்தரையை அடைந்தார். பக்தர்கள் ஸ்ரீனிவாசருக்கு ஜே.. கோவிந்தா.. கோபாலா என உணர்ச்சி பெருக்கில் கோஷமிட்டனர். பின் அவருக்கு தீபாராதனை நடந்தது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
=====


