முதுமக்கள் தாழியை 3500 வருடங்களுக்கு முன்பே உருவாக்கி அதில் தங்களது மூதாதையர்களை நாகரீகத்துடன் புதைத்தவன் தமிழன். இவன் தன்னுடைய ஒவ்வொரு நன்மை தரும் விசேடங்களுக்கு எல்லாம் மண் பாண்டங்களை பயன்படுத்தி வந்தான். மண்பானையில் சோறு பொங்கி, மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிசுவைதான். எனவே கிராமங்களில் மண்பாண்டங்களில் சமைப்பதை தற்போதும் சிலர் கடைபிடித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்திலேயே இயற்கை குளிர்சாதன பெட்டியாகவே மண்பாண்டங்களை பயன்படுத் தியுள்ளான் தமிழன் . பதார்த்தங்கள் கெட்டு போகாமல் இருக்க மண்பாண்ட பொருள்களை பயன்படுத்தியுள்ளான். அந்த கலத்தில் பலகாரங்களையும் இதில் வைத்து தான் பாது காத்து உள்ளான்.
விஷத்தினை அகற்றும் மூலிகையை உள் தடவிய மண்பாண்டங்களும் தமிழனின் தாயரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழன் வருடம் முழுவதும் தன்னுடைய உணவுக்கு தேவையான தானியங்களை குலுக்கை எனும் ஒரு ஆளுயுற மண்பாண்டத்தில் வைத்து பாதுகாத்து உள்ளான். இந்த மண்பாண்டங்களில் இருந்து நெல் தானியத்தினை வெளியே எடுக்க அடியில் துளையும் போடப்பட்டு மண்பாண்டங்கள் நேர்த்தியாக செய்யப்பட்டது.
ஓலை குடிசை வீட்டில் வசிக்கும் போது இவனின் தானியங்கள் பாதுகாக்கும் குலுக்கைகளும் ஒரிடத்தில் ஓரமாக நின்று கொண்டிருக்கும். விதை நெல்லை பாதுகாக்கும் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட தன்மையும் இந்த குலுக்கைக்கு உண்டு.
இந்த குலுக்கை பற்றி அந்த காலத்தில் பல கதைகளை கிராமத்தில் கூறுவார்கள். அதில் ருசிகர கதை : ஒரு சோதிடன் தனது ஜாதகத்தினை பார்த்துள்ளான். அந்த ஜாதகத்தில் அவன் மீது கொலை பழி விழப்போவதாக இருந்துள்ளது. எனவே பயந்து போன அவன் தனது மனைவியிடம் வெளியூருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு, வீட்டில் உள்ளே இருந்த குலுக்கைக்குள் ஒளிந்துகொண்டான். அவன் போறாத காலம் இரவு ஒரிடத்தில் கொலை நடந்தது. கொலை செய்தவன் ஜோதிடனை போலவே இருந்துள்ளான். எனவே காவலர்கள் இவன் வீட்டை தேடி வந்து மனைவியிடம் கேட்டனர். அவள், தன் கணவர் வெளியூருக்கு போய் விட்டார் என்று கூறினார்.
ஆனால் காவலர்கள் வீடுமுழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்க வில்லை. எனவே வெளியே வந்து விட்டனர். ஆனால் தான் சொல்லியும் கேட்கவில்லையே என மனைவிக்கு கோபம். “ஆமாம் நான் என் புருஷனை குலுக்கைகுள்ளே ஒளிச்சி வைச்சிருக்கேன்.. என் சொல்லி விட்டு கோபத்துடன் அருகில்இருந்து குலுக்கையை கையில் கிடத்த மண்வெட்டியை எடுத்து உடைத்து விட்டாள். அங்கே அவன் புருஷன் பரக்கபரக்க முழித்துக்கொண்டிருந்தான். காவலர்கள், கொலை செய்து விட்டு குலுக்கை குள்ளேயா இருக்கே… என்று நாலு வாங்கு வாங்கி பிடிதது சென்று விட்டனர்.
இதுபோல கதைபேசிகளுக்கு குலுக்கைகள் மூலமாக செவிவழி, சுவைபடும் கதைகள் பட பேசப்படும். பாளை அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தின் நடராஜன் அய்யா அவர்கள் இயக்கிய நாடகத்தில் கூட இதுபோல ஒரு காட்சியை நான் 1992 வாக்கில் பார்த்துள்ளேன்.
காலங்கள் கடந்தது. கூரை வீடுகள் காரை வீடுகள் ஆனது. அந்தசமயத்தில் கூட மாடியில் காயப்போடும் நெல் மணிகளை அள்ளி கொண்டு வராமல் , மாடியில் ஒரு துளை போட்டு அதன் கீழே சாக்கு மூட்டை வைத்து தானியங்களை பிடிக்கும் வழக்கத்தினையும் வைத்து இருந்தார்கள். அப்போதும் குலுக்கை வீட்டுக்குள் ஓரிடத்தில் இருந்து கொண்டிருந்தது.
அப்போது கிராம மக்களுக்கு சேப்டி லாக்கர் இந்த குலுக்கை தான். தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தினை குலுக்கைக்குள் நெல்லை மணிக்குள் செருகி வைத்து தான் பாதுகாத்து வந்தார்கள்.
1996 வாக்கில் நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா வல்லகுளம் பஞ்சாயத்து புதுக்குளம் கிராமம் சென்ற போது குலுக்கை லாக்கருக்குள் பணம் வைத்து பாதுகாத்த மக்களை பார்த்து இருக்கிறேன்.
காலங்கள் கடந்தது.
விவசாயம் முப்போகம் ஒரு போகமாக கரைந்தது. விவசாய வேலைக்கு ஆள் குறைந்தனர். இயந்திரங்கள் வந்தது. அறுவடை செய்து அப்படியே நெல் அறுவடை மிஷின் மூலம் சாக்கில் பிடித்து வியாபாரிகளுக்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு பணத்தினை மட்டுமே கொண்டு வந்தனர்.
அடுத்த வருட பயிருக்கு விதை நெல்லை விவசாய சம்பந்தபட்ட அரசு அலுவலங்களில் வந்து வாங்கினர். நெல்லை அவித்து, குற்றி காயப்போடும் வழக்கம் எல்லாம் இல்லை. நேராக அரிசியை விலைக்கு வாங்கினர். சிலருக்கு அரசு தரும் இலவச அரிசியே போதுமானதாக இருந்தது. அப்புறம் குலுக்கைக்கு என்ன வேலை..
அப்படியே விட்டு விட்டனர். அப்படியே விட்டு விட்டாலும் பாராவயில்லலை. முது மக்கள் தாழிகள் போல உடைந்த வீட்டுக்குள் பதிந்த நிலையில் தங்களது மூதாதையர்களை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது இந்த குலுக்கைகள்.
கடந்த மாதம் புதுக்குளத்துக்கு நான் சென்ற போது இந்த குலுக்கைகளை கண்டேன். உடைந்த வீட்டுக்குள்ளும், நவீன டிராக்டர் வீலுக்கு பக்கத்தில் உடைந்த நிலையிலும் குலுக்கை இருந்தது. அடடா.. 1996 வரை பண லாக்கராக இருந்த குலுக்கைக்காக இந்த நிலை.. என்னை அறியாமலேயே என் மனதில் சிறிது கலக்கம்.
“யாராவது வீட்டில் குலுக்கை இருக்குமா…?”
என கவலையுடன் கேட்டேன்.
முன்னாள் கவுன்சிலர் அண்ணன் கோபால் வந்தார். “எங்கள் வீட்டில் இருக்கிறது” என்று கூட்டி சென்றார். அவரது பேரன் உயரத்துக்கு இருந்த அந்த குலுக்கை அருகே அவரையும் வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவரை போலவே அவரது கை பனியனும் அழகாய் இருந்தது.
குலுக்கையை வீட்டுக்குள் பார்த்த எனக்கு கொஞ்சம் சந்தோஷம்.
-முத்தாலங்குறிச்சி காமராசு