செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜேந்திரன், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தூத்துக்குடி பாராளுமன்றத்துக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி எம்பி அவர்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கால்வாய் கிராமத்தில் வைத்து நடந்த திமுக ஊராட்சி கூட்டத்தில் செய்துங்கநல்லூர் நூலக கட்டிடத்துக்கு நிதி உதவி வழங்க கனிமொழி எம்.பி உறுதி அளித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்துங்கநல்லூர் நூலக வாசகர் சிவராமன் என்பவர் தற்போது குருப் 4 ல் தேர்வாகி சிவகங்கை மாவட்டம் இளையான் குடி சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வாசகர் வட்டம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்சியில் ஓய்வுபெற்ற தபால் காரர் செல்லப்பா, ஆறுமுகநயினார், கண்ணன், லட்சுமணன், செல்லப்பா, பரமசிவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.