செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழநாட்டார்குளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற துரைராஜ்(வயது46) இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இருதயராஜ் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சுகன்யாவுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று நாட்டார்குளத்தில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாய பணிகளை செய்து வந்தார்.
அப்போது திடீரென மதியம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் அவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ளார். இதற்கிடையில் அவரது வீட்டில் தோட்டத்துக்கு சென்றவரை காணவில்லையே என தேடினர். மனைவி முத்து லெட்சுமி தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அந்தோணி என்ற துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.