ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சி.பா.ஆதித்தனார் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள், வணிகர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீவைகுண்டம் கல்வி அபிவிருத்தி சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு டி.வி.எம். சேவாபாலம் தொண்டு நிறுவன நிறுவனர் இருளப்பன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சண்முகநாதன், வக்கீல்கள் சங்க தலைவர் பெருமாள்பிரபு, வேளாளர் சங்க தலைவர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன், பொறியாளர் காளியப்பன், வக்கீல்கள் சங்க செயலாளர் சங்கரலிங்கம் மற்றும் பலர் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர்.
கூட்டத்தில், தமிழ் மாமுனிவர் குமரகுருபரருக்கு அவர் பிறந்த பூமியான ஸ்ரீவைகுண்டத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். சி.பா.ஆதித்தனார் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் விவசாயம் செழிக்க நீர்நிலைகள், குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருமலைநம்பி நன்றி கூறினார்.