சாத்தான்குளம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரியைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி சிவகாமி சுந்தரி(50). இவருக்கு சொந்தமான தோட்டம் ஊரின் மேல்புறத்தில் உள்ளது. இன்று மதியம் சுமார் 11 மணி அளவில் சிவகாமி சுந்தரி தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சிவகாமி சுந்தரி கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.
சிவகாமி சுந்தரி இதுகுறித்து சாத்தான்குளம் போலிசில் புகார் செய்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாத காலங்களில் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ராஜமன்னார்புரத்தில் விக்டோரியா என்பவரிடம் 9 பவுன் செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அடுத்து நவம்பர் மாதம் 5ம் தேதி சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை விளக்கில் நின்று கொண்டிருந்த ஆசிரியை மகேஸ்வரி என்பவரிடம் 4 பவுன் செயினும், அதே நாளில் பிரண்டாகுளத்தில் ஜெனித் செல்வகுமாரி என்பரிடம் 4 பவுன் செயினும், நவம்பர் 11ம் தேதி மீரான்குளத்தில் தெருநல்லியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சரோஜா என்பவரிடம் 4 பவுன் செயினும், 22ம் தேதி சாத்தான்குளத்தில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு செல்வராணி என்பவரிடம் 3 பவுன் செயினும் பைக்கிள் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஜனவரி மாதம் 3ம் தேதி நெடுங்குளத்தைச் சேர்ந்த நவமணி என்ற பெண்ணிடம் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு சென்று விட்டனர். நவம்பர் மாதம் சாத்தான்குளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்தனர். அந்த நகை கவரிங் என்பதால் பின்னர் மீண்டும் வந்து அந்த பெண்ணின் முகத்தில் வீசி எறிந்து சென்று விட்டனர். இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் சாத்தான்குளம் அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் வீட்டை உடைத்து திருட்டு நடந்தது. இதுவரை 39 பவுன் நகையை நகைப்பறிப்பு கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுவரை சாத்தான்குளம் போலிசார் திருட்டு வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் செயினை மட்டுமே மீட்டுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
====