சாத்தான்குளம் அருகே வடக்கு இளமால்குளம் சாலை சீரமைப்புப் பணி 5 மாதங்களாக கிடப்பில் கிடப்பதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் வட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட நார்த்தன்குறிச்சி ஆலமரத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கும் வடக்கு இளமால்குளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து அதை சீரமைக்கும் பொருட்டு ஆலமர பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து புதிய தார்ச்சாலை அமைக்க, வடக்கு இளமால்குளம், புளியங்குளம், மேலநொச்சிகுளம் வரை பணி தொடங்குவதற்காக சாலை கிளறி போடப்பட்டது. அதன்பின் 4 மாதங்கள் ஆகியும் எந்தவித வேலையும் தொடங்காமல் கிடப்பில் போடப்ப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று பேருந்து ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.