
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புதூரில் கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாலத்தின் அருகில் தற்காலிகமாக குழாய்கள் மீது மண்களை போட்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தினை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் திண்டுக்கல்லில் இருந்து உடன்குடிக்கு அந்த வழியாக ரவை மற்றும் மைதா ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி அந்த தற்காலிக பாலம் வழியாக வந்தபோது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த மைதா மற்றும் ரவை மூட்டை மூட்டையாக கீழே விழுந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சமாகும். இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தட்டார்மடம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.