மேகநாதனுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை.
நிலைமையை உணர்ந்தான் மேகநாதன்.
“எப்படி தப்பிக்க”.
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு திட்டம் இடவேண்டியது இருக்கிறது.
என்ன செய்வது போலிசில் மாட்டிக்கொண்டால் அதே கதிதான்.
பொன் பொருளை இழந்து விட்டோம். வீடு மனைகளை சூறையாடி விட்டார்கள். பெற்றோர்களை பார்க்க முடியவில்லை. ஆனாலும் இந்த ஆங்கில அரசிடம் மண்டியிடக்கூடாது.
மேகநாதன் முடிவு செய்தான்.
உண்மைதானே. இந்த நாட்டுக்கு விடுதலை தரவேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் மக்களை நினைத்துப் பார்க்கிறான்.
ஏழைபாழைகள். அவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு போலிசில் மாட்டிக்கொண்டால் அவர்களது குடும்பத்தினை யார் காப்பாற்றுவார்.
வயதான தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள். மேகநாதன் தான் நிதி கொடுக்க வேண்டும். அதற்கு இவன் ஜெயிலில் மாட்டிகொள்ளக் கூடாது.
எனவே மீண்டும் போலிசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கிளம்ப வேண்டும்.
மீண்டும் பிரச்சனை
போலிசுக்கு டிமிக்கு கொடுக்க ஒவ்வொரு திட்டம் தீட்ட வேண்டி இருக்கு. எப்படியும் தப்பிக்க வேண்டும்.
அந்தி மயங்கும் நேரம்.
இன்று எப்படியாவது இந்த இடத்தினை விட்டு தப்பிக்க வேண்டும்.
எப்படி தப்பிக்கலாம்?.
அங்கே ஒரு வியாபாரி வைக்கோலை கட்டுகளை வைத்துக்கொண்டிருந்தார். அவர் அந்த வைக்கோல் கட்டை திருச்செந்தூருக்கு கொண்டு செல்ல சுமை கூலிகளை தேடிக்கொண்டிருந்தார்.
“ஏலே இதுல 20 கட்டு வைக்கோல் இருக்கு. திருச்செந்தூர் கொண்டு போனும். 19 பேரு கிடைச்சிட்டானுவ. ஒருத்தன் கிடைக்கலை”.
மேகநாதன் முடிவு செய்தான். கூட்டத்தோடு கூட்டமாக வைக்கோல் கட்டை தூக்கி கொண்டு செல்லுவோம். யாரும் கண்டு பிடிக்க முடியாது.
“ நான் கட்டு தூக்குறேன்”.
“ஏலே வைக்கோல் கட்டை தூக்கி வைச்சா. நீ காணாம போயிருவ. அவ்வளவு குள்ளமாக இருக்க. நீ சுமந்துருவியா?”.
“என்ன அண்ணாச்சி இப்படி சொல்லுதீய. உடன்குடி பக்கத்தில பொறந்துட்டு, வைக்கோல் கட்டை சுமக்க முடியலைன்னா எப்படி? சுமப்பேன்”.
மேகநாதனுக்கு வைக்கோல் வியாபாரி வைக்கோல் கட்டை தூக்கச்சொன்னது சாதகமாக அமைந்தது.
ஆமாம். இவன் குள்ளம். இவன் மீது வைக்கோல் கட்டை தூக்கினால் வைக்கோல் கட்டு ஒன்று சாலையில் நகர்ந்து செல்வது போலத்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது உள்ளே இருக்கும் நம்மை போலிசு பிடிக்க இயலாது. முடிவு செய்தான். “வைக்கோல் போரை தூக்கி விடுங்கள்” என்றான்.
அண்ணாச்சி வைக்கோல் போரை தூக்கி விட்டார். “ஏலே கூலியை திருச்செந்தூருல வாங்கிக்க”.அண்ணாச்சி சொல்வது அவன் காதில் ஏற வில்லை நடக்க ஆரம்பித்தான். அங்கிருந்து கடற்கரை சாலைக்கு வந்தவன் திருச்செந்தூர் நோக்கி நடையை கட்டினான். அமலி நகர் அருகே வரும் போது போலிஸ் மறைத்தார்கள்.
20 வைக்கோல் கட்டு காரர்களை கூப்பிட்டு, சோதனை செய்தார்கள்.
“ஏலே வைக்கோல் கட்டை கீழே போடுங்கள். உங்களில யாராவது மேகநாதன் இருக்கியளா?” என கேட்டனர்.
மேகநாதன் குரலை மாற்றி பேசினான்.
“என்ன எஜமான் அர்த்தம் புரியாம பேசுதிய. மேகநாதன் எவ்வளவு பெரிய பணக்காரன். அவன் வைக்கோல் கட்டை சுமக்கவா போறான். அப்படி சுமந்து திருச்செந்தூர் வந்தா நீங்க புடிக்கமலையா போயிருவிய. அவன் உடன்குடி ஊருக்குள்ளத்தான் இருப்பான்”.
“ஏலே என்ன இப்படி உறுதியா சொல்லுத?”.
“ஆமாம் எஜமான் அவன் பணக்காரன், அவன் எங்களை மாதிரி கஞ்சிக்கு செத்தவனா. அவன் வந்து வைக்கோல் போரை சுமக்க போறானாக்கும்”.
மூச்சி விட்டு திரும்பவும் பேசினான்.
“விடுங்க எஜமான் கழுத்து வலிக்கு. நாங்க போய் வைக்கோல் கட்டை போட்டுட்டு, காலையிலே மாப்பிள்ளை சாமி விசுவரூப தரிசனம் பாக்கணும்”.
“மாப்பிள்ளை சாமியா?. ஏலே அப்படின்னா நீங்க மீன் பிடிக்கிறவியளா?”
மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை மாப்பிள்ளை சாமி என அழைப்பது வழக்கம்.
“ஆமாம் எஜமான் இப்போ கடலுக்கு மீன் பிடிக்க சீசன் இல்லை. அதனால் வைக்கோல் கட்டை சுமக்கலாமுன்னு வந்தா, எங்களை போய் சந்தேக படுதியளே”.
ஒரு போலீஸ் சொன்னான். “எஜமான் இது உழைக்கிற வர்க்கம். சும்மா இருக்காது. ஏதாவது வேலை செய்யுவானுவ. அவனுவளை விட்டுருவோம். பாவம் கழுத்து வலிக்கும்”.
அதிகாரியும் நினைத்தான். மேகநாதன் இப்படி வரமாட்டான். அவன் எப்படியும் ஏதாவது ரூபத்துல வருவான் அவனை பிடிக்காம விடக்கூடாது.
“சரிலே நீங்க போங்க”.
20 வைக்கோல் கட்டு காரர்களையும் விட்டுவிட்டார்கள். அவர்கள் ஒய்யாரமாய் திருச்செந்தூர் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
கடையில் வைக்கோல் கட்டை முதலாளி சொன்ன இடத்தில் போட்டார்கள்.
அங்கிருந்த கங்காணி கூலி கொடுத்தான். அதை வாங்கி கொண்டான். அதன் பின் தன்னுடைய சட்டையை கழற்றி எறிந்தான். இடுப்பில் கட்டிய துண்டை எடுத்து தலைப்பாகை அணிந்துகொண்டான்.
அதன்பின் அங்குள்ள நண்பர் மூலம் ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றான். அங்கே உள்ள மாடியில் உள்ள அறையில் தங்கினான்.
போலிஸ் இடம் மேகநாதன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல காரணம் இருந்தது.
போலிசுக்கு மேகநாதன் என்றால் நல்ல உயரமாய் கம்பீரமாய் இருப்பான் என்றே நினைத்தார்கள். எனவே அதுபோலவே தேடினார்கள். ஆனால் இங்கோ மேகநாதன் குள்ளமாகத்தான் இருப்பான்.
கருத்த தேகத்தில் மேகநாதன் இருப்பான் என போலிசு நினைத்து இருந்தார்கள். படுக்கப்பத்து சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களின் கலர் அது. ஆனால் மேகநாதனோ கோயில் பூசாரி போல வெள்ளவெள்ளெரீர் என இருப்பார். ஒரு பூணுல் மட்டும் போட்டால் போதும் இவர் திருச்செந்தூர் பூசாரி போத்தி போல ஆகி விடுவார். எனவே புதிதாக பார்க்கும் போலிசுக்கு இவர் மேகநாதன் என்பதே கேள்விக்குறியாக மாறி விடும்.
மறுநாள் விடிந்தது.
நண்பன் சொன்னான். “மேகநாதா இனிமேல் நீ இங்கே இருந்தா பிரச்சனை ஆகிரும். உடனே கிளம்பு. அதுவும் அதிகாலையிலேயே கிளம்பு” என்றான்.
வேறு வழியில்லாமல் மேகநாதன் கிளம்பினான்.
பழைய காயல் உப்பளத்துக்குள் அலைந்து திரிந்து மதியம் முத்தையா புரம் வந்து சேர்ந்தான்.
நன்றாக பசித்தது.
எப்படி சாப்பிட, யாரிடம் சாப்பாடு கேட்க. இவர்கள் பள்ளிக்கூடம் நடத்துபவர்கள். நிச்சயம் ஆங்கியே அரசு உடன் நல்ல உறவு வைத்து இருப்பார்கள். நம்மை பிடித்து கொடுத்து விடக்கூடாது. எனவே தனது வேஷ்டிசட்டையை அழுக்காக்கி கொண்டான். மனநோய் பிடித்தவன் போல தனது கழுத்தை சுலுக்கு பிடித்தது போல இழுத்து வைத்துக்கொண்டான். தனது காலை இழுத்துக்கொண்டு நடந்தான்.
வாய்பேசமுடியாதவன் போல சைகையில் பேசினான்.
முத்தையாபுரத்தில் செல்லையா கோனார்தான் பள்ளிகூடம் நடத்தி வந்தார்.
மேகநாதனை பார்த்தவுடன் உச் கொட்டினார். பாவம் அழகான வாலிபனா இருக்கான். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவனா இருக்கானே. தனது வீட்டில் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லி அவனுக்கு கொடுத்தார். அவன் அதை சாப்பிட்டான். அதன் பின் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். அவனிடம் சில பதார்த்தங்களை துண்டில் கட்டிகொடுத்தார்கள். அதையும் சேகரித்துக்கொண்டான்.
தூத்துக்குடியை நோக்கி நடந்தான். அவன் நடந்து வரும் வழியில் பலபோலிஸ் காரர்களை பார்த்தான். ஆனால் யாருக்கும் சந்தேகம் ஏற்பட வில்லை. பாவம் மனநிலை பாதிக்கப்பட்டவன் என அனுதாப பட்டனர். எனவே இவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.
உப்பளம் வழியாக தூத்துக்குடி ராமையா பண்ணையார் வீட்டுக்கு வந்தான்.
அங்கே மேகநாதனை கண்ட ராமையா பண்ணையார் அதிர்ச்சியுற்றார். போலிசு விரட்டும் இவன் ஏன் நம்ம வீட்டுக்கு வந்தான். ஆச்சரியத்துடன் கேட்டாலும் அவன் மீது மரியாதை உண்டு.
“ஏடே மேகநாதா போலிசு பயங்கரமா தேடுது. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள 27 பேரையும் கைது செய்யனுமாம். அப்படி இல்லைன்னா ஒவ்வொரு குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துருவாவ போல”.
மேகநாதன்அமைதியாக இருந்தான்.
“ஏடேய் நீ எங்கேயும் அவுகளை மறைச்சி வைச்சிருக்கியா?”.
“இல்லை பண்ணையாரே. நானே ஓடி மறைஞ்சி திரிஞ்சிக்கிட்டு இருக்கேன்”.
“ஏடேய் உன் தலைக்கும் கெடு விதிச்சிருக்கானுவ. தெரியுமா?”
“தெரியும்”.
“அப்படியிருந்தும் இப்படி தைரியமா உலாத்துத”
அமைதியாக இருந்தான் மேகநாதன்.
“ஏடேய் உன்னை மாதிரி பணக்காரன் வெளியே இருக்குணும் அப்படி இருந்தாத்தான் ஜெயிலுக்கு போறவனு குடும்பத்தை காப்பாத்த முடியும்”.
தலையாட்டினான்.
“நீ பாட்டுக்கு தூத்துக்குடி வந்துட்ட. இங்கே கடற்கரையில நிறைய போலிச நிப்பானுவ உன்னை உசிரோட விடுவானுவளா?”
“என்னை ஒண்ணும் செய்யமாட்டானுவ. இங்குள்ள போலிசுக்கு என்னை அடையாளம் தெரியாது”.
“என்னடே சொல்லுத”.
“ஆமாம் பண்ணையாரை என்னை யாருக்கும் தெரியாது”.
“சரி. சரி குளிச்சிட்ட வா. சாப்பிடு. இன்னைக்கு ராத்திரி இங்க தங்கு. ஆனா நாளைக்கு தாக்குபிடிக்காது. காலையிலயே ஒடிரு” என்றார் பண்ணையார்.
மேகநாதன் தலையாட்டினான்.
பாவம் தான் பிறந்த நாட்டில் செய்யாத தவறுக்கு, ஒருகொலைகாரன் போல் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்ற வில்லை.
இந்த வாழ்க்கை அவனுக்கு பிடித்திருந்தது.
“எப்படியாவது போலிசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இந்த நாட்டில் இருப்பேன். இந்த நாடு சுதந்திரம் அடையும் வரை எவனும் என் மசிரைகூட புடுங்க முடியாது”. மனதுக்குள் திடமாக நினைத்தான் மேகநாதன்.
வீட்டு கொல்லையில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்தான்.
உப்புத்தண்ணீதான். ஆனாலும் குளிர்ச்சியாக இருந்தது.
தூத்துக்குடியைப் பொறுத்த வரை, இங்கு தண்ணீர் பஞ்சம் அதிகம். எனவே கடற்கரையில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் தூர்த்துக் குடித்தக் காரணத்தினால் தூர்த்துக் குடியானது. இதுவே மருவி தூத்துக்குடியானது என்பர்.
கி.மு.123 இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் “சோஷிக் குரி” (சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துறை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், ‘தூத்துக்குடி’ என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. “சோல்சியம் இண்டோரம்” என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் ‘தூத்துக்குடி’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் வெணிஸ் நகரப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் பற்றி, சென்னை முத்துக்குளித்துறையைப் அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் ‘தூத்துக்குடி’ என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, ‘தூட்டிகொரின்’ என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படிபட்ட தூத்துக்குடி இன்று ஆங்கிலேயர்கள் கையில் கிடைத்து சின்னப்பின்னமாகிவிட்டது. அதை காப்பாற்ற பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
நமது இந்தியாவின் செல்வம் எல்லாம் கொள்ளையடிக்கப் படுகிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டும்.இந்தியா அன்னியர்களிடம்இருந்து காப்பாற்ற வேண்டும்.
பாவம் குளிக்கும் போது கூட மேகநாதனின் எண்ண ஓட்டம் எப்படி செல்கிறது பார்த்தீர்களா?
தூத்துக்குடி கடற்கரை சாலையில் ஆங்கிலேயர்க்குச் சொந்தமான நூற்பாலை ஒன்று இருந்தது. இந்தச் சாலை முழுவதுமே நூற்பாலை தொடர்பான அலுவலகங்களே இயங்கி வந்தன.
இந்த நூற்பாலையை ‘கோரல்மில் என்று அழைத்தனர் ஆங்கிலேயருக்குச் சொந்தமான நூற்பாலையில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வேலை செய்தனர். இத்தொழிற்சாலை நிர்வாகம் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொழிலாளர்களை வேலை வாங்கியது. உணவு இடைவேளை நேரம் என்பதைக் குறைந்த கூலி சிறார்களை வேலைக்கு வைத்தல் , கூலி கொடுக்க மறுத்ததோடு, வார விடுமுறை கொடுக்காதது, மனித உரிமை மீறல்களைச் செய்து வந்தது.
இந்த ஆலையின் உரிமை பறிப்புக்கு எதிராகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வ.உ.சி தலைமையேற்று போராட்டத்தைத் தொடங்கினார். அந்த இடம் தூத்துக்குடியில்தான் இருக்கிறது. அருகில்தான் இருக்கிறது. அந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் மேகநாதனிடம் இருந்தது.
இங்கு நடந்த போராட்டத்தினை எண்ணிப் பார்க்கிறான். இங்குதொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, ஆங்கிலேயர்கள் கதவடைப்பு செய்யப் போவதாக மிரட்டினர். போராட்டம் சிலநாட்கள் நீடித்தது. வ.உ.சி. தலைமையேற்று போராட்டத்தினை நடத்தினார். அன்று இவ்வூரில் பெரும்பான்மையாக வாழ்ந்த மீனவர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். பொருளாதார உதவிகளையும் வழங்கினர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்களுக்கு வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கஞ்சி ஊத்தி போராட்டத்தை நடத்தினர். இதனால் பஞ்சாலை நிர்வாகம் சில கோரிக்கைகளை ஏற்க முன் வந்தது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.
இதுபோலஆங்கிலேயர்கள்அடக்கி ஒடுக்கிய ஊர் தூத்துக்குடி. ஆனாலும் போலிசு கெடு பிடி அதிகமாக இருந்தது. அவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சும்மா விட மாட்டார்கள். வ.உ.சி. கதி மேகநாதனுக்கு தெரிந்திருந்தது. எனவே அவரை போல ஜெயிலுக்கு அழைத்து சென்று செக்கிழுக்க வைத்து விடுவார்கள்.
குளித்து முடித்து சாப்பிடும் முன்பு பல எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.
மறுநாள் விடிந்தது.
பண்ணையார் பணம் கொடுத்தார். “ஏடே எனக்கே பயமா இருக்கு. நீ எப்படி தப்பிச்சு போகப்போறியோ தெரியலை. எங்க போக போற”.
“எங்க போக பண்ணையாரை. எங்கையாவது போவேன். ஆனா உயிரை இழக்க மாட்டேன். நிச்சயம் எங்கயாவது உயிரோடு இருப்பேன்”.
அவனை பார்க்கும் போது பண்ணையாருக்க பெருமையாக இருந்தது. ஆனால் அவனை உடன் வைத்து க்கொள்ள பயமாகவும் இருந்தது. முன்கருக்கல் நேரத்தில் அவனை வழியனுப்பி வைத்தார்.
அங்கிருந்த ஒரு கடையில் காவி வேட்டி, கமண்டலம் வாங்கினான். அதன்பின் அதை உடுததுக்கொண்டு மதுரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
மதுரைக்கு போற வழியில் எங்கெல்லாம் மடம் இருக்கிறதோ. அங்கேயெல்லாம் தங்கினான்.
அங்கிருந்தவர்களிடம் விடுதலை போராட்ட கனலை பரப்பினான்.
அருப்புக்கோட்டையில் ஒருவன் கேட்டுவிட்டான்.
“சாமி நாம பிச்சை எடுத்து பிழைக்கோம். ராத்திரி மடத்தில அடங்கி கிடக்கோம். நமக்கு ஏன் சாமி சுதந்திரம்” என்றான்.
மேகநாதன் பிடித்துக்கொண்டான். “இது நம்ம நாடு. நாம பிச்சை எடுக்கலாம். நம்ம மக்க கிட்ட பிச்சை எடுக்கலாம். ஆனா அந்நியன் கிட்ட பிச்சை எடுக்கணுமா?”
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
“இது சித்தர் வாழ்ந்த புண்ணிய பூமி. இங்க ஆன்மிக தழைத்தோங்கி நின்னுச்சி. இன்னைக்கு அந்நியம் வந்தான். அவன் மொழியையும், அவன் மதத்தையும் திணிக்கான் . அதை ஏத்து கொள்ளணுமா என்ன-?”
“சாமி நாம பண்டாரம்”.
“பண்டாரமா இருந்தா நாட்டு மேலே அக்கரைவேண்டாமா?”
“என்ன சாமி சொல்லுதிய?”
“இது ஆன்மிக பூமி, இரண்டாயிரம் வருசம் நாம் தமிழ் பராம்பரியம் சிறப்பா போய்கிட்டு இருக்கு மேலை நாட்டு கலாச்சாரம், மேலை நாட்டுக்காரன் பண்பாடுன்னு நாம சிக்கி சீரழியணுமா?”
அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அங்கே ஒருபெரிய பிரசங்கமே செய்தான்.
அதே வேளையில் இவன் மீது அனைவருக்கும் சந்தேகமும் வர ஆரம்பித்தது. இவன் யார்? உண்மையிலேயே பண்டாரம் தானா? அல்லது வேறு எதுவும் உளவாளியா? யோசித்தார்கள்.
ஆகவே உடனுக்குடன் மடத்தினை மாத்தினான் மேகநாதன்.
அடுத்த கட்டம் அவன் அங்கிருந்து கிளம்பி மதுரையை நோக்கி கிளம்பினான்.
ஆங்காங்கே உணவு கிடைத்தது. மேற்ச்செலவுக்கு தூத்துக்குடி பண்ணையார் கொடுத்த பணம் பையில் இருந்தது.
ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தார்.
மதுரையில் இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் தங்கினான். அங்கே யாருக்கு தெரியாமல் இருந்துகொண்டான். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. லாட்ஜ் செல்லும் போது மிரசுதாரர் போல தனது உடைகளை மாற்றிக்கொண்டான். அவன் உடை மாற்றம். அவனை யாருன்னு கண்டுகொள்ள இயலவில்லை. போலிசும் சந்தேகம் படவில்லை. ஆனாலும் அடத்த இடத்துக்கு நழுவி செல்ல ஆசைப்பட்டான் மேகநாதன்.
இதற்காக அவன் பழனி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பழனியில் தங்கி விட வேண்டும்.
ஏற்கனவே இவருக்கு பண்டாரமாக இருந்த நாள்கள் உதவியாக இருந்தது.
மதுரை திண்டுக்கல் வழியாக பழனி வந்து சேர்ந்தான். இனி என்ன செய்ய?
இவ்வளவு தூரம் வந்து விட்டோம். இனி போலிஸ் பிடிக்காது. தலை தப்பி விட்டது என்று நினைத்தான்.
ஆனால் இது பொய் கணக்கு.
தான் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என மொட்டையடித்தான். இதனால் இவன் ஆள் அடையாளம் தெரியாதமாதிரி ஆகி விட்டான்.
பழனியில் ஒரு சாது சாமியார் மடத்துக்கு சென்றான். அவரிடம் நான் ஒரு அனாதை, முருகனே கதி என வந்து விட்டேன். என்னை தங்களது மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்டான்.
சாது சிரித்தார். ஏன் சிரித்தார். எதற்கு சிரித்தார் என தெரியவில்லை.
இருக்கும் வரை இருந்து கொள் என ஒரு வார்த்தையில் கூறினார்.
அதன் அர்த்தம் என்ன இருக்கும் வரை இருந்து கொள்.
ஒருவேளை உயிர் இருக்கும் வரை இருந்து கொள் என கூறுகிறாரா? ஆங்கிலேய அரசு தன்னை சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கி இருக்கிறார்களே. அது இவருக்கும் தெரிந்து விட்டதோ? என நினைத்தான்.
ஆனால் அவருக்கு அதெல்லாம் தெரிந்த மாதிரி தெரியவில்லை.
ஆனாலும் அவரது கண் இவனை நோக்கி எதையோ சொல்லியது.
பச்சை வேட்டி கட்டிக்கொண்டான். கழுத்தில் உத்திராட்சம் போட்டுக்கொண்டான். முழுமையான சாமியாராக மாறி விட்டான் மேகநாதன்.
அப்போது எதிரே குடும்பத்தோடு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த காவல் துறை உதவி ஆய்வாளர் ஆழ்வார் நாயுடு.
அவர் இவனை பார்த்து விட்டார்.
“ஏய். நீ மேகநாதன் தானே”
நாயுடு கூறியவுடன், “சே. நான் அவன் இல்லை” என கூறிவிட்டு, மலைமீது வேகமாக ஏறினான்.
நாயுடுக்கு சந்தேகம். பழனி போலிசில் புகார் செய்தார். “குலசேகரபட்டினத்தில் வில்பர்ட் லோன் துரை வழக்கில் அரசு சுட்டு பிடிக்க உத்தரவு போட்ட மேகநாதன் பழனியில்தான் இருக்கிறான்” என கூறினார்.
பழனி போலிஸ் பரபரப்பானது. பழனி மலையை போலிஸ் படை சுத்தி வளைத்தது.
மலையை விட்டு கீழே இறங்கி வருபவர்கள் எல்லோரையும் ஒரே வழியாக இறக்க வைத்து சோதனை செய்தனர்.
பழனியே பரபரப்பானது.
“ஆங்கிலேயர் சுட்டு பிடிக்க உத்தரவு பிரபித்த கைதி பழனியில் தலைமறைவாக இருக்கிறான்” என பலரும் பரபரப்பாக பேசினார்கள்.
ஆனால் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.
எனவே யார்?. இவனா இருக்குமோ? அவனா இருக்குமோ? என அனைவரும் தேடிக்கொண்டிருந்தார்கள்.
நாயுடு விட வில்லை.
மேகநாதன் தான் எப்படியும் தப்பிக்க திட்டமிடுவானே. அவன் பக்தர்கள் கும்பலோடு கும்பலாக காவடி எடுத்து ஆட்டம் போட ஆரம்பித்தான்.
காவடி பக்தர்களை நிச்சயம் சோதனையிட மாட்டார்கள் என்ற எண்ணம் மேகநாதன் மனதில் தோன்றியது.
கீழே இருந்து வந்த பக்தன் ஒருவன் கூறினான். “என்ன சாமி அநியாயம் இது. காவடி பக்தர்களை கூட விடாமல் சோதனைபோடுதாங்க. முருகனை கும்பிட வருதவிய என்ன கொள்ளை கூட்டக்காரங்வியளா?” என ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
அப்படியென்றால்..
காவடி பக்தர்களையும் சோதனையிடுகிறார்கள்.
சோதனையிட்டால் நாம் மாட்டிக்கொள்வோம்.
என்ன செய்யலாம்.
காவடியோடு நடந்து வந்தவன் மூளையில் தீடீரென்று ஒரு ஐடியா தோன்றியது.
காவடியை அப்படியே போட்டு விட்டு, மலையில் இருந்து குடிதண்ணீர்ர் ஏற்ற மலைக்கு பின் புறம் போடப்பட்டிருந்த பைப் லைன் மூலமாக தரதரவென இறங்கினான்.
அடுத்து அங்கிருந்து ஒரே ஒட்டமாக ஒட்டன் சத்திரம் வந்து சேர்ந்தான்.
அதே வேளையில் பழனி அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவடி பக்தர்கள் உள்பட அனைவரையும் ஆய்வு செய்தனர். முகத்தில் திருநிறு பூசி வந்த பக்தர்களை, முகத்தினை கழுவச்சொல்லி ஆய்வு செய்தனர்.
ஆனால் எங்க«யும் மேகநாதன் இல்லை.
அப்படியென்றால் தப்பித்து விட்டான்.
எப்படி தப்பித்து இருப்பான். எங்கே சென்று இருப்பான்.
நாயுடு மனது நொந்து போய் விட்டார்.
டிமிக்கி கொடுத்து விட்டான். எங்கே போய் இருப்பான். தப்பித்து விட்டானே. அவன் மாட்டியிருந்தால் தனக்கு ரிவார்டும் பதவி உயர்வும் கிடைத்து இருக்குமே. எல்லாவற்றையும் வீணாக மாற்றி விட்டானே. என மேகநாதன் மீது பயங்கரமான கோபம் இருந்து. ஆனாலும் இவர் என்ன செய்ய முடியும். மேகநாதனோ அங்கிருந்து தப்பித்து ஒடி விட்டான்.
எப்போதுமே போலிசிடமிருந்து தப்பித்து விடுகிறான்.
என்ன வித்தை வைத்து இருக்கிறானோ தெரியவில்லை.
நாயுடுவிடம் உயர் அதிகாரி கேட்டான். “யோவ் நாயுடு உண்மையிலே இங்க மேகநாதன் வந்தானா?”
“இல்லை எஜமான் நான் கண்ணால பாத்தேன் . அவன் தான்”.
“பொறவு எங்கவே போனான். அவன் என்ன மந்திரவாதியா? மலையில் பாறைக்குள்ள மறைஞ்சிபோயிட்டானா?”
கோபமாக கேட்டார்.
நாயுடுவால் பதில் சொல்ல இயலவில்லை.
****
குலசேகரபட்டினம் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருந்தது.
கொலையாளி 26 நபர்களின் வீடுகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களோட பெற்றோரையும், உறவினர்களையும் அடித்து உதைத்து காவல் நிலையம் கொண்டு சென்று கொடுமைப்படுத்தினர்.
குற்றவாளி மந்திரக் கோனின் இல்லம் உடன்குடி வைத்திலிங்கபுரத்தில் இருந்தது. அதை ரிசர்வ் படையினர் உடைத்து எறிந்தனர். அப்போது எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற வகையில் அவ்வூர் கிராம முன்சீப் அங்குக் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளைக் கொண்டு சென்று விட்டார். லோன்துரையைக் கொலை செய்த வீரர்கள் சித்தன்விளை பெரியநாடார் கூறிய ஆலோசனைப்படி தனித்தனியாகப் பிரிந்து சென்று தலைமறைவாகிவிட்டனர்.
ஆனாலும் போலிசார் எப்படியும் இவர்களை கைது செய்ய வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இராசகோபால், காசிராஜன். பெஞ்சமின் ஆகிய மூவரும் பன்னம்பாறைக்குத் தென்மேற்கே உள்ள ஒரு காட்டிற்குள் தலைமறைவாக இருந்தனர்.
இவர்கள் சாப்பாடுக்கு என்ன செய்வார்கள்.
ஒரு நண்பர் இதற்கான ஏற்பாட்டில் இறங்கினார்.
24.09.1942
பல அடுக்குகளைக் கொண்ட கேரியரில் சாப்பாடு சேகரித்து அதை காட்டுக்குள் கொண்டு சென்றார்.
கூடையில் அவர் சாப்பாடடை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் போது ஒருவன் சந்தேகமாக பார்த்தான். இவன் ஏன் இந்த காட்டுக்குள் இவ்வளவு பெரிய கூடையில் கேரியரை கொண்டு செல்கிறான்.
அவனுக்கு பொறி தட்டியது, அப்படியென்றால் உள்ளே தான் கொலையாளி இருக்கிறான்.
அவன் கிளம்பி போய் சாத்தான் குளம் போலிசில் புகார் கூறினான்.
மிகப்பெரிய போலிஸ் கூட்டம் அங்கே வந்தது.
சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பியவனை லாகவமாக பிடித்தது.
“யாருலே நீ. எங்கலை இந்தகாட்டுக்குள்ளபோயிட்டு வாரே”.
“விறகு பொறுக்க எஜமான்”.
“இறக்குல கூடையை”
இறக்கினான்.
“எங்கலை விறவு”-.
“எஜமான் உடம்பு வலிக்கு. அதான் விறவைபோட்டுட்டு வந்துட்டேன். நாளைக்குத்தான் போய் எடுப்பேன்”.
“இவ்வளவு பெரிய டிபன் கோரியலை எதுக்கு”.
“நான் தான் சாப்பிடகொண்டு போனேன்”.
“ஏலே என்ன நீபகாசுரனா? அந்த அரக்கனால வண்டி வண்டியா சோறுதின்னுவானே. அது போல நிம்பியா. அதான் இவ்வளவு பெரிய டிபன் கேரியலா?”
அவன் பரக்க பரக்க முழித்தான்.
“ஏலே இவனை பிடிச்சி ரெண்டு தட்டு தட்டுங்க. எல்லா உண்மையும் வந்துரும்”.
ஏட்டையா ஒருவர் லத்தியை எடுத்து அவன் முட்டுக்கு கீழே இரண்டு தட்டு தட்டினார்.
அவ்வளவு தான் அவன் உளற ஆரம்பித்து விட்டான்.
உடனே போலிஸ் படை காட்டுக்குள் புகுந்தது.
நாங்குநேரி போலீஸ் சர்க்கில் இன்ஸ்பெக்டர் பி.கே. வரதாச்சாமி தலைமையில் போலிஸ் காட்டுக்குள் சல்லடை போட்டு தேடியது.
முதல் மூன்று குற்றவாளியான இராசகோபால், ஏ.எஸ். பெஞ்சமின், காசிராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார்.
25.09.1942
ஆர்.செல்லத்துரையைக் குலசேகரன்பட்டினம் போலீஸ் சுப்பாநாயக்கர் கைது செய்தார்.
8.11.1942
நாங்குநேரி உதவி போலீஸ் அதிகாரி ஆதிநாராயணதாஸ் மந்திரக் கோனைக் கோவில்பட்டியில் கைது செய்தார்.
கைதாகாமல் இருந்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொருவராக போலீசில் சரண் அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களைப் போலீசார் அடித்து உதைத்துத் துன்புறுத்தினர். அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் வாங்கினர்.
எங்கும் ஓலம். எல்லா பக்கமும் கூச்சல்.
போலீசாரின் துன்புறுத்தல் தாங்கமுடியாமல் சிலர் தாங்கள் லோன்துரையைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும், உப்பளத்திலிருந்து கைப்பற்றிய பொருட்களையும் சித்தன்விளை பெரியநாடாரிடம் கொடுத்தோம் எனக்கூறிவிட்டனர்.
அனைவருடைய கவனமும் சித்தன் விளையை நோக்கி கிளம்பியது.
குலசேகரன்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இராமலிங்கப் பிள்ளையை சித்தன்விளை பெரியநாடாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆணை பிறபித்தனர்.
பெரிய நாடாருக்கும் உதவி ஆய்வாளருக்கும் நீண்டநாள் நட்பு இருந்தது. எனவே உதவி ஆய்வாளர் இராமலிங்கம் பிள்ளை பெரிய நாடாரைக் காப்பாற்ற நினைத்தார். இவர்தான் மேகநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.
சித்தன் விளை பெரிய நாடார் இல்லத்திற்குச் சென்றார் இராமலிங்கம் பிள்ளை, “லோன்துரையின் கொலையில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், தாங்கள் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு என்னைப் பணிக்கின்றனர். எனவே கொலையாளிகள் தங்களிடம் விட்டுச் சென்ற துப்பாக்கிகள் மற்றும் பொருட்களை உங்கள் ஊர்: அருகேயுள்ள கோவில் கினற்றுக்குள் போட்டுவிடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
அடுத்த நிமிடம்.
சித்தன் விளை பெரிய நாடார் என்ன செய்ய என தெரியாமல் தவித்தார்.
(குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்)


