கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் உயிரியியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும்ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து கல்லூரி முதல்வர் ராமலிலிங்கம் வரவேற்று பேசியது: தற்போது உயர் விளைச்சல் ரகங்கள், ஒட்டு ரகங்கள் சாகுபடி செய்வதால் உண்டாகும் புதிய பூச்சிகளான பருத்தி தத்துபப்பூச்சி, பருத்தி வெள்ளை , இளஞ்சிவப்பு காய்புழு தாக்குதலுக்கு இந்த உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாடு முறை சிறப்பானது என விளக்கமளித்து பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குநர் ராமராசு பேசியது: நோய்களைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், தென்னையில் அண்மையில் கண்டறியப்பட்ட ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் அதனால் பெற்ற வெற்றியைக் குறித்தும் பேசினார்.
சன் அக்ரோ பயோவின் இயக்குநர் சித்தானந்தம், உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதின் அவசியம் பற்றி விளக்கினார். கருத்தரங்கில் தலைமை வகித்த இயக்குநரகத்தின் இயக்குநர் சித்ரா சங்கர், இயற்கை எதிரிகளின் பல்லூயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். ஆச்சாரியா ரங்கா வேளாண் பல்கலைக்கழக முதல்வர் ரமேஷ்பாபு , தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் குறித்து பேசினார்.
மதுரை வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் சுரேஷ், கடைகளில் விற்கப்படும் கலப்பட பூச்சிக்கொல்லிலிகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகளின் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது. கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் அப்துல் ராசாக் நன்றி கூறினார்.