கால்வாய் உலக முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடந்தது.
ஸ்ரீ வைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் உலக முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கிராமத்து மக்கள் சார்பாக மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடந்தது.
ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ வைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், செய்துங்கநல்லூர் ஆய்வாளர் ராஜசுந்தர் ஆகியோர் மாட்டு வண்டி போட்டியினை தொடங்கி வைத்தனர்.
9 பெரிய மாட்டு வண்டிகளும், 23 சிறிய மாட்டு வண்டிகளும் இலக்கை நோக்கிச் சீறிப் பாய்ந்தன.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதலாவதாக மதுரை மாத்தூர் திரவியம் நினைவாகச் சேரன் செங்குட்டுவன் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசாக நாலந்துலா உதயம் துரைப்பாண்டியன் வண்டியும், சக்கரம்மாள் புரம் எம்.எஸ்.கமலா மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி நான்காவது பரிசையும், வேலங்குளம் கண்ணன் வண்டி 5வது பரிசையும் பெற்றது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் வல்ல நாடு சிவபார்வை பங்களா முதல் பரிசையும், முத்துராமலிங்கம் கால்வாய் இரண்டாவது பரிசையும், மறுகால் குறிச்சி சுப்பம்மாள் மற்றும் நயினார் புரம் சந்தியா சிவானி ஆகிய மாட்டு வண்டிகள் மூன்றாவது பரிசையும், மறுகால்குறிச்சி சுப்பம்மாள் மாட்டு வண்டி நான்காவது பரிசையும், தேனி மாவட்டம் பூமலைக்குன்று ஆகாஷ் மாட்டு வண்டி ஐந்தாவது பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டிக்கான முதல் பரிசு ரூபாய் 31 ஆயிரத்தினை கால்வாய் ரைஸ்மில் அதிபர் இராமையாத்தேவரும், 2ம் பரிசு ரூபாய் 25 ஆயிரத்தை அதிமுக கருங்குளம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகையா பாண்டியனும், மூன்றாம் பரிசு ரூபாய் 17 ஆயிரத்தைச் செல்வி ஸ்நாக்ஸ் சக்திவேலும், நான்காவது பரிசு ரூபாய் 3 ஆயிரத்தை மின்வாரிய சிதம்பரத்தேவரும் வழங்கினார்கள்.
சிறிய மாட்டு வண்டியில் முதல் பரிசு ரூபாய் 21 ஆயிரத்தை அகில இந்திய பார்வர்ட் பிளாக் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கமும், இரண்டாம் பரிசு ரூபாய் 15 ஆயிரத்தை வழக்கறிஞர் தெய்வக்கண்ணனும், மூன்றாம் பரிசு ரூபாய் 11 ஆயிரத்தை வாழைக்காய் வியாபாரி சுப்பிரமணியனும், நான்காவது பரிசு ரூபாய் 3 ஆயிரத்தை நிலக்கிழார் முத்துக்குமாரும் வழங்கினார்கள்.
குதிரை வண்டிப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் 15 ஆயிரத்தைக் கால்வாய் பஞ்சாயத்துத் தலைவர் சேது(எ)சேது ராமலிங்கமும், இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரத்தைத் தொழிலதிபர் வீரபுத்திரன்(எ)பாண்டியும், மூன்றாம் பரிசு ரூபாய் 7501 பணத்தைத் தொழிலதிபர் ஆண்டித்தேவரும், நான்காவது பரிசு ரூபாய் 3 ஆயிரத்தைத் தொழிலதிபர் பேச்சி துரையும் வழங்கினார்.
பெரிய மாட்டு வண்டிக்கு முதல் கொடி குத்து விளக்கை நிலக்கிழார் சங்கர பாண்டியும், சின்னமாட்டு வண்டிக்குப் பலசரக்கு கடை நம்பியும், குதிரைவண்டிக்குப் பலசரக்கு கடை பொன் இசக்கியும் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளைக் கால்வாய் கிராம மக்கள் செய்திருந்தனர்.