
தமிழ்நாட்டில் கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தி வருகிறது.
வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என பல்வேறு படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றன. கீழடி அகழாய்வை நடத்தி வந்த மத்திய தொல்லியல் துறை அடுத்த கட்ட ஆய்வுகளை வேறு எங்கும் நடத்தவில்லை. நடத்திய ஆய்வு முடிவுகளையும் வெளியிடவில்லை
இந்த நிலையில் தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக ஆஜரான நம்பிராஜன், அஜய் யாதவ் ஆகியோர் தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் குறிப்பிட்டனர்.
அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் எனப் பதிலளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? எனக் கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் எனப் பதிலளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாகக் கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினர். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அனைத்து மொழிகளும் நிகரானவை. ஆனால் ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. மொழிகளுக்கிடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. தமிழ் கல்வெட்டுக்களைக் கண்டறிந்து, தமிழைப் பெருமைப் படுத்தியவர்கள் பிரிட்டிஷ் காரர்களே. மொழி வாரியாக கல்வெட்டுக்களின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் விபரங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கைத் தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
மதுரை கோமதி புரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிமாறன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கர்நாடக மாநிலம் மைசூருவில், மத்திய தொல்லியல் துறையின் மண்டப அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கல்வெட்டுத்துறை இயங்குகிறது. இங்குப் பழமையான கல்வெட்டுகள், பனை ஓலை, செப்பேடுகள் பாதுகாக்கப்படுகின்றன. தமிழர்களின் அரசியல், சமுதாயம் மற்றும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக உறுதி செய்வதற்கான பல ஆதாரங்கள் அங்கு உள்ளன.
மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகம் பழைய கட்டிடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது பல கல்வெட்டுகள், அதன் படிமங்கள் சேதமடைந்து விட்டன. இங்கு உள்ள கல்வெட்டுகள் போதிய பராமரிப்பு இல்லாமலும், சேதமடைந்து விட்டன. இங்கு உள்ள கல்வெட்டுகள் போதிய பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பு இன்றியும் உள்ளன. எனவே தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் ஆவணங்களை உடனடியாக சென்னை தொல்லியல் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். இங்குக் கொண்டு வரப்பட்ட கல்வெட்டுகள், ஆவணங்களைப் படிமம் எடுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தவும், இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
தேவையான வசதிகள்.
இந்த மனுவும் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வக்கில் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மைசூரு கல்வெட்டுத்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து உள்ளன. பணிச்சுமையால் அலுவலர்கள் தொடர் போராட்ட்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் படிமம் எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உரியப் பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால் கல்வெட்டுகள் சேதமடைகின்றன. சமீபத்தில் தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்தில் கூட, பல தமிழ் கல்வெட்டுகள் படிமம் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 27 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகள் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த தகவல் தவறானது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளதாகப் பல புத்தகங்களில் ஆதாரத்துடன் தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் கல்வெட்டுகளை பாதுகாக்கவும், படிமம் எடுக்கவும் தேவையான வசதிகள் உள்ளன என்று வாதாடினார்கள்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி ஒத்தி வைத்தனர்.