தூத்துக்குடி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் புதிய வாழ்வாதாரத் திட்டம் மூலம் மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் எல். சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய வாழ்வாதார திட்டத்துக்காக ரூ. 1.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வாழ்வாதார திட்டத்தில் நடவுப் பணி முடித்த விவசாயிகள் செலவின பட்டியல்களை ஒப்படைத்து மானியம் பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான வாழை 7,200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒக்கி புயல் தாக்கியதில் 488 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சேதமடைந்தது. சேதமதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு 1150 விவசாயிகளுக்கு ரூ. 66 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கான புதிய வாழ்வாதார திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஹெக்டருக்கு ரூ.13,500 நிவாரணமாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் மீண்டும் வாழை சாகுபடி செய்திட முதலாம் ஆண்டுக்கு ஹெக்டருக்கு ரூ. 26,250-யும், இரண்டாமாண்டு மறுதாம்புக்கு ரூ. 8750 வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு வாழ்வாதார திட்டத்தின்படி நடவுப் பணிகள் முடிக்கப்பட்டு செலவின பட்டியல்களை சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்து மானியம் பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.