தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 24–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
5–ம் திருநாளான 28–ந்தேதி இரவில் கருடசேவை நடந்தது. நேற்று காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோவில் ரத வீதிகள் வழியாக சென்று கடைசியில் நிலைக்கு வந்தது.
இந்த தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் விசுவநாத், தக்கார் கார்த்திக், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதி நாயகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் தெப்பம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். நாளை (செவ்வாய்க்கிழமை) இரவில் ஆச்சாரியார்கள் தெப்பம் நடக்கிறது. சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 8–ந்தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம், சாத்துமுறை கோஷ்டிக்கு பின்னர் ஆழ்வார்திருநகரிக்கு திரும்புகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விசுவநாத், தக்கார் கார்த்திக் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.