ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல் முதலாக மக்கள் வாழ்விடத்தினை கண்டு பிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் வரலாற்றில் முதல் முதலாக அகழாய்வு அறிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி மே 25ம் தேதி துவங்கியது. இந்த பணி செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல் முறையாக அகழாய்வு 1876ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் தான் அகழாய்வு நடந்தது. ஆனால் இதுவரை அதற்கான ஆய்வு அறிக்கை வெளிவர வில்லை. 1876 ல் ஜகோரும், 1902 ல் அலெக்ஸாண்டர் இரியாவும், 2004 ல் தியாக சத்திய மூர்த்தி தலைமையிலும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வு அனைத்தும் ஆதிச்சநல்லூரில் பாதுகாக்கப்பட்ட 114 ஏக்கருக்குள் நடந்தது. இவை அனைத்தும் இடுகாடுகளே, எனவே இங்கு முதுமக்கள் தாழிகளும் அதனோடு புதைக்கப்பட்ட பொருள்களும் கிடைத்தது.
தற்போது தமிழக தொல்லியல் துறை ஆய்வு நடைபெறும் இந்த வேளையில் தொல்லியல் இயககுனர் பாஸ்கர் தலைமையில், தொல்லியல் அலுவலர் லோகநாதன் உள்பட ஆய்வு மாணவர்கள் பங்கேற்கும் இந்த அகழாய்வில் மக்கள் வாழ்ந்த இடங்களை தேடி ஆய்வு நகர்ந்தது. எனவே 144 வருடத்துக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டது.
வாழ்விட பகுதிகளை கண்டறிவதற்காக 40 குழிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இதுவரை 500 பழங்கால மக்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்கள் கண்டுபிடிககப்பட்டுள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பும் அறியப்பட்டது. இதனால் அகழாய்வு ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததன் அடிப்படையில் மத்திய தொல்லியல் துறையினர் சத்திய பாமா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தனர். ஆதிச்சநல்லூர் பகுதியில் அடுத்த கட்ட ஆய்வு செய்வதற்கு ஆய்வு செய்தனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆதிச்சநல்லூரில் இன்னும் ஆய்வு செய்வதற்கு ஏதும் இல்லை என்று தகவல் தெரிவித்தார். இது தொல்லியல் ஆர்வலருக்கு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது. ஆனாலும் தமிழக தொல்லியல் துறையினர் இந்த பகுதியில் அகழாய்வு செய்ய முடிவு செய்தனர். மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், 114 ஏக்கர் பாதுக்கப்பபட்ட பகுதிக்குள் இவர்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வில்லை. ஆனாலும் மனந்தளராத தமிழக தொல்லியல் துறை பாண்டியராஜா கோயில் அருகே பல குழிகள் அமைத்து ஆய்வு செய்தது. அருகில் உள்ள வீரளபேரி, கால்வாய் செல்லும் இடம், ஆதிச்சநல்லூர் ஊருக்குள் என பல இடங்களில் தற்போது குழி தோண்டினர். இதன் பயனாக முன்னோர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் தொன்மையை வெளிபடுத்தும் அற்புத வாய்ப்பாக அமைந்துள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்களான மண்பானைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள், தாயப்பொருட்கள், கூரைஓடுகள், சுடுமண் பொம்மைகள் வட்ட சில்கள், புகைப்பான்கள், கண்ணாடி மணிகள், இரும்பு கத்தி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள், சதுரங்க காய் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள், கீரல்கள், குறியீடுகள் என 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அகழாய்வு குழிகளை அளவீடு செய்யும் பணிகள் எத்தனை மணல்பரப்புகள் படிந்துள்ளது என்பது குறித்தும் அளவீடுகளை தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த பணி 30ம் தேதி நிறைவடைந்தவுடன் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்படும். ஆனாலும் ஆய்வாளர்கள் அனைவரும் இதே பகுதியில் ஒரு மாத காலம் தங்கி கணினி பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்கள்.
தியாக சத்தியமூர்த்தி ஆய்வின் போது இந்த பகுதியில் கண்டு பிடித்த பொருள்கள் குறித்து அறிக்கை வெளிவந்தால் மேலும் பல அரிய தகவல்கள் வெளிவரும். 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதன் முடிவு வெளிவரவில்லை. மாநில அரசு தற்போது ஆதிச்சநல்லூர் ,சிவகளை, கொடுமணல், கீழடி போன்ற பகுதியில் நடந்த ஆய்வுக்கான முன்னோடி அறிக்கையை மூன்று மாதத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். ஆகவே ஆய்வு அறிக்கை 6 மாதத்தில் வெளிவரும் என அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த ஆய்வில் முழு க்க இந்திய நாட்டினை சேர்ந்த பல்கலைகழகங்களும், ஆய்வகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு மைல் கல்லாகும். எப்போதுமே வெளிநாட்டை நாடிக்கொண்டிருந்த இந்தியர்களுக்கு இது முன்னோடியாக உள்ளது.
மேலும் மழை காலம் முடிந்தவுடன் மீண்டும் தமிழக தொல்லியல் மூலமாக மீண்டும் அகழாய்வு நடைபெறவுள்ளது. இதில் ஆதிச்சநல்லூர், சிவளையோடு கொற்கையும் ஆய்வு செய்ய படும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆய்வு செய்ய பட வேண்டிய இடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.
எனவே தாமிரபரணி கரை தொல்லியல் ஆய்வுக்கு இந்த நாள் மணி மகுடமாக போற்றப்படுகிறது.
தற்போது ஆதிச்சநல்லூர் ,சிவகளையில் எடுககப்பட்ட பொருள்கள் அனைத்து படிப்படியாக ஆய்வுககு அனுப்பபட்டு வருகிறது. இதில் பல்வேறு துறையினர் தனித்தனியாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே விரைவில் தமிழனின் நாகரீகம் வெளிப்படும் . மேலும் தாமிரபரணி கரை இடைச்சங்கம் என்று அழைககப்படுகிறது.
இதுபோலவே முதல் சங்கம் நடந்த லெமுரியா கண்டமும் ஆய்வு செய்யபடவேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள்கோரிககை விடுத்துள்ளனர்.


