விவசாய சட்டம் 2020 ஐ திரும்ப பெறக்கோரி செய்துங்கநல்லூரில் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாய சட்டம் 2020, மின்சார சட்டம் 2020, விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கருங்குளம் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் செய்துங்கநல்லூரில் உள்ள திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னதாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத்துணைத்தலைவர் கணபதி, கண்ணன், மாரியப்பன் உள்பட பலர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பின் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில் போலிசார் 10 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்தார்.


