மத்திய பட்ஜெட் 1.02.2026 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் கலாச்சார் மையம் அமைத்து, சுற்றுலா மேம்படுத்த திட்டத்தினை அறிவித்தார். இந்த அறிவுப்பு தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிச்ச நல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்யவேண்டும். 2004 ல் அகழாய்வு செய்த அறிக்கை வேண்டும். இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் 2017 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கின் படி மத்திய அரசு ஆதிச்சநல்லூரை சுற்றி கம்பி வேலி அமைத்தது. மாநில தொல்லியல் துறையினர் ஆதிச்சநலலூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வு செய்தனர்.
சுமார் 6 வருடங்களுக்கு முன்பு 01.02.2020 அன்று இதே போல் ஒரு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்தார். இதன் படி திருச்சியில் தனியாக மத்திய தொல்லியல் அலுவலகம் அமைக்கப்பட்டு அதன் இயக்குனராக டாக்டர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இயக்குனராக யதீஸ்குமார் உள்பட தொல்லியல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துவங்கியது. 11.12.2020 அன்று ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. 10.10.2021 அன்று ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க அடிக்கல்லை கனிமொழி எம்.பி அவர்கள் நட்டினர். அப்போது மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் இருந்தனர். அதன் பின் மிக வேகமாக பணி நடந்தது. ஏ, பி, சி சைட் என வேலைகள் நடந்தது. ஊர் மக்கள் சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடமும் இலவசமாக வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள்தலைமையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் மற்றும் மத்திய தொல்லியல் திருச்சி மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மிகச்சிறப்பாக பணி செய்த காரணத்தினால் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் உள்ளது உள்ளபடியே ஆதிச்சநல்லூர் பி. சைட்டில் உருவாக்கப்பட்டது. இந்த மியூசியத்தினை மிகச்சிறப்பாக வடிமைத்தனர். இதன் திறப்பு விழா 05.08.2023 அன்று நடந்தது. இந்த வேளையில் ஊர் மக்கள் இலவசமாக இடம் கொடுத்த இடத்தில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பின் இந்த பணிகள் எல்லாம் அப்படியே கிடப்பில் கிடந்தது. குறிப்பாக சி.சைட்ல் அகழாய்வு முடிந்து சைட் மியூசியம் அமைக்க வேண்டி தற்காலிக செட் போடப்பட்டிருந்தது. அந்த செட் தற்போது பழுதாகி விழும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. பி.சைட்டில் திறக்கப்பட்ட சைட் மியூசியம் 2023 டிசம்பர் 6 ந்தேதி தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அதையும் முறையாக பராமரிக்க வில்லை. இதனால் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் என மார்தட்டிய ஆதிச்சநல்லூர் மியூசியம் கனவானது தவிடுபொடியானது.
இதனால் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கதவை தட்டி நின்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை அரசுக்கு அறிவித்தனர்.
இதற்கிடையில் மாநில அரசு கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூரில் தாங்கள் அகழாய்வின் போது எடுத்தப் பொருளை கொண்டு பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்றை நெல்லை ரெட்டியார் பட்டி மலையில் அமைத்தனர். 1 மாதத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் இந்த இடத்தினை பார்வையிட்டனர். உலக தமிழர்கள் பார்வையில் இந்த அருங்காட்சியகம் பிரபலமானது. அதேவேளையில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்த இடத்தில் பார்வையாளர்களை கவரும் திட்டம் இல்லாத காரணத்தினால் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியத்தின் நிலை கவலை கிடமாக போய் விடுமோ என தொல்லியல் ஆர்வலர்கள் அச்சமுற்றனர்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆதிச்சநல்லூரில் கலாச்சார் மையம் அமைத்து, சுற்றுலா மேம்படுத்த திட்டத்தினை அறிவித்துள்ளார்.
இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது
“கடந்த 1.02.2020 அன்று பட்ஜெட்டின் போது இந்தியாவில் ஐந்து இடங்களில் சைட் மியூசியம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைந்தது. இதை கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நிர்மலா சீதாராமன் கனிமொழி எம்பி முன்னிலையில் திறந்து வைத்தார். அதன் பிறகு உலக தர தரமான தரமான அருங்காட்சியம் கட்டுவதற்காக இங்கே அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்த நேரத்தில் இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் ஆதிச்சநல்லூர் ஆர்வலர்கள் மிகவும் மன வருத்தமடைந்தனர்.
இதற்கிடையில் திருநெல்வேலியில் பொரு நை அருங்காட்சியத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இவ்விடத்திலே 1மாதத்தில் பல லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர். மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை ஏற்படுத்தியது. இதனால் உற்சாகமடைந்தாலும் இந்தியாவிலே முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் அப்படியே கிடப்பில் கடந்து விடுமோ என அய்யப்பட்டோம்.
இந்த நிலையில் ஆறு வருடம் கழித்து, 1.02.2026 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கவும் சுற்றுலாத்தலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனாலும் தற்போது திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் உள்ள அருங்காட்சியத்தில் இருந்து ஆதிச்சநல்லூருக்கு நேரடி பஸ் போக்குவரத்து செய்யப்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இந்தப் பணியை மிக விரைவாக செய்வார்கள் என நம்பிக்கையோடு இருக்கின்றோம்.


