வல்லநாடு அருகே பரிதாப சம்பவம் நடந்தது. அதிகாலையில் பஞ்சர் பார்க்க நின்ற மினிலாரி மீது லாரி மோதியதால், மீன் வியாபாரி உள்பட இருவர் இறந்தனர். இதனால் முதலைகுளம் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
நான்குநேரி அருகே உள்ள முதலைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முத்துகுட்டி(47). இவர் மீன் வியாபாரம் பார்த்து வருகிறார். தினமும் தூத்துக்குடியில் இருந்து தனக்கு சொந்தமான மினி லாரியில் மொத்தமாக மீன் எடுத்து வந்து பாணன் குளத்தில் வைத்து சில்லறை வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று மீன் எடுப்பதற்காக இவர் தூத்துக்குடி சென்றார். இவருக்கு சொந்தமான மினிலாரியில் மீன் ஏற்றிக்கொண்டு அவர் வல்லநாடு அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தார். வாகனத்தினை அதே ஊரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜா (வயது30) என்பவர் ஓட்டி வந்தார். அவர்களுடன் வடக்கு கரந்தேநேரி வடக்கு தெரு கணேசன்(53), இசக்கிதாய் என்ற எஸ்தர்(40) ஆகியோர் உடனிருந்தனர். திடீரென மினிலாரியின் வலது பின் பக்க டயர் பஞ்சர் ஆனது. உடனே முத்துகுட்டியும் , ராஜாவும் இறங்கி ஸ்டெப்னி டயர் மாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி எதிர்பாராத விதமாக மினிலாரி மீது மோதியது. இதனால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது டயரை மாற்றி கொண்டிருந்த முத்துகுட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் உயிருக்கு போராடிய நிலையில் ராஜாவை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனாளிக்காமல் இறந்தார்.
இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் படி முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டாரஸ் லாரி டிரைவர் நடுகூட்டுடன்காடு கணபதி மகன் சௌந்திரராஜனை (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துபோன முத்துக்குட்டிக்கு திருமணமாகி ஐந்து ஆண் குழந்தைகள் உள்ளன. மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. முத்துக்குட்டியின் மூத்த மனைவி இறந்த பிறகு செல்வி என்ற மயிலை மறுமணம் செய்துள்ளார். அவருக்கு குழந்தை இல்லை. டிரைவர் ராஜாவுக்கு பத்மா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் முதலைகுளம் பகுதியில் பேரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.