தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டையில் திருக்குர் ஆன் மாநில மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பேட்மாநகரத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். பொருளாளர் நாஸர், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், இமாம் பரீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அஸாருதீன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் முஹம்மது, மாநில செயலாளர் இம்ரான் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ”திருக்குர் ஆன்” மாநில மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாநில பொதுச்செயலாளர் முஹம்மது நிருபர்களிடம் கூறியதாவது, தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு தேவையில்லாமல் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.
முஸ்லிம் மக்களுக்குரிய முத்தலாக்கில் தேவையில்லாமல் திருத்தம் கொண்டு வருவதற்கு மோடி அரசு முயன்று வருவது கண்டனத்திற்குரியதாகும். பாஜக அரசின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருக்குர் ஆன் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இனியும் முத்தலாக்கில் தேவையில்லாமல் திருத்தம் கொண்டு வர முயன்றாலும், அதனை கட்டாயமாக திணிக்க முயன்றாலும் நாங்கள் அதனை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.
கடந்த தேர்தலின்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு 7சதவீத இடஒதுக்கீடு தருவதாக உறுதி கூறியிருந்தார். ஆனால், அவரது மறைவிற்கு பிறகு ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி அரசு இந்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றாமலயே இருந்து வருகிறது. மத்திய அரசில் 7சதவீதமும், மாநில அரசில் 10சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிடவேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், 100க்கு 95சதவீத மக்களை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டு திடீரென்று மாற்று ஏற்பாடுகளை எதுவும் செய்யாமல், சிறுவணிகர்களை நசுக்கிடும் வகையில் இந்த அறிவிப்பினை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
இதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்ற ரீதியில் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதில் தடையில்லை என்பதற்கான காரணம் என்ன? என்பதை இந்த எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு தான் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ரஷீத்காமில், மாணவரணி செயலாளர் வஸீம் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், பேட்மாநகரம் கிளை செயலாளர் காஜாமுகைதீன், பொருளாளர் முனவ்வர்அலி, துணைத்தலைவர் கலீலூர்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பேட்மாநகரம் கிளைத்தலைவர் கலிமுத்தீன்பைஜி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் தமீம்அன்சாரி நன்றி கூறினார்.