தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் காரணமாக தண்ணீர் நிறம் மாறி செல்லும். எனவே தாமிரபரணி ஆற்றில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீரும் கலங்கலாக காணப்படும். இதனால் மழை காலங்களில் குடிநீரில் அதிகளவு பூச்சிமருந்து கலந்து விநியோகிப்பார்கள்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் ஆங்காகங்கே மழை பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் ஒரு நாள் மட்டும் 20 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. அதன்பிறகு பெரியளவில் மழை எதுவும் பெய்யவில்லை. சில இடங்களில் அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நெல்லை மாநகர பகுதி மற்றும் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கலங்கலாக செந்நிறத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மழை பெய்யாத இந்த காலத்தில் குடிநீர் தொடர்ந்து செந்நிறமாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் அதிகாரிகள் ஆற்றினை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது பாபநாசம் அணையில் 41.20 அடி தண்ர் உள்ளது. நீண்ட நாட்களாக பாபநாசம் அணை தூர்வாரப்படாததால் அணையில் 15 அடிக்கு கீழ் அனைத்தும் சகதிகளாக நிரம்பியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையினாலும், சூறாவளி காற்றினாலும் அணை தண்ணீரில் சகதியும் கலந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.