ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.ரவிந்தரநாத்குமார் ஆகியோரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங்க ஹாலோன் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள இடங்களையும் ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதே குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின்னர் கடந்த 23ம் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வருவாய்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் பிப்ரவரி மாதம் 23ம் தேதியிலிருந்து 29ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக உடன்குடி பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆசாத், உடன்குடி ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க செயலாளர் விஜி, இதுரிஸ், அதிமுக 5வது வார்டு செயலாளர் முருகன், மக்கள் நலன் காக்கும் இயக்க ஒருங்கிணைப்பாளர் முகைதீன், செந்தில், பூக்கடை கணேசன், கதிர், நா.முத்தையாபுரம் கார்த்திக், வக்சலா பேன்சி உரிமையாளர் பரமசிவன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எனவே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.