தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 9 நவத்திருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளான இன்று நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கள்ளபிரான் சயன கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல் மற்ற கோயில்களில் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர்.
மதியம் 3மணிக்கு மேல் சயன திருக்கோலம் களைந்த பின்னர் மாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், மாலை 5 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு நான்காயிர திவ்யபிரபந்த கோஷ்டி நடந்தது. அதன்பிறகு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு நடைபெற்றது. இரவு 7.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
மேளதாள வாத்தியங்களுடன் தீப்பந்த ஒளி வெள்ளத்தில் தங்க தோளுக்கினியான் வாகனத்தில் தங்க குடை சாத்தி சுவாமி கள்ளபிரான் ராஜநடை, சிம்மநடை, சர்பநடை நடத்து பரமபத வாசல் என்றழைக்கப்படும் சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


