தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் தென்சிதம்பரம் என போற்றப்படும் சிவன் கோயிலில் ஆருத்ரா வைபவ திருநடன தரிசன திருவிழா ஜனவரி 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் 10 வது திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது.
தென்தில்லை என்று போற்றப்படும் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கரபாதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. சிதம்பரத்தில் நடராஜர் திருநடன காட்சியை காட்டியது போலவே இங்கேயும் திருநடன காட்சியை காட்டுகிறார் என்பது ஐதீகம். எனவே சிதம்பரத்தினை போலவே இங்கேயும் 10 நாள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1ந்தேதி புதன்கிழமை முதல் 10 நாள்கள் காலையும் மாலையும் யாகசாலை பூஜைகளும் சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் வைபவமும் திருநடன தீப ஆராதனை தரிசனமும் நடை பெற்று வருகிறது. தொடர்ந்து சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உலா எழுந்ருளல் தீபாரதனை நடைபெற்று வந்தது. 10 வது திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. அதை தொடர்ந்து ருத்ர ஹோமம் நடந்தது. அதிகாலை 4.30மணிக்கு மேல் அபிசேகம், 5.30க்கு மேல் காரைக்கா¬ அம்மையார் மற்றும் மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் திருநடன காட்சியை அளித்தல் வைபவம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிவகாமி அம்பிகா ஸ்ரீ நடராஜபெருமான் திருவீதி உலா எழுந்தருளல் நடந்தது. அதன் பின் சுவாமி அன்னதான சத்திரம், செய்துங்கநல்லூர் மெயின் ரோடு வழியாக செய்துங்கநல்லூர், வி.கோவில் பத்து முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
மாலை 5 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, சிவ பூத கன வாத்தியம் இசை முழங்க சுவாமி உள் வீதி உலா எழுந்தருளல் நடந்தது. பதினொன்றாம் நாள் காலை 9 மணிக்கு ஸ்ரீ நடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் தீபாராதனை கருங்குளம் தாமிரபரணி புஷ்கரணியின் சுவாமி புனித நீராடல் நடைபெறும். மாலை 5 மணிக்கு கொடி பட்டம் நிறைவு பெறும் நிகழ்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீக பேரரவையினர் செய்து வருகின்றனர்.


