கருங்குளம் ஒன்றியம் தெற்கு காரசேரியில் குடிதண்ணீர் வேண்டும் என பெண்கள் கருங்குளம் ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுக்க வந்தனர்.
கருங்குளம் ஒன்றியம், தெற்கு காரசேரி 2 வது வார்டு அரசன் தெருவில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு தெற்கு காரசேரி பஞ்சாயத்து மேல் மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 1 வருடகாலமாக இந்த பகுதிக்கு குடிதண்ணீர் சீராக வழங்கப்படவில்லை. பைப் லைன் உடைந்தாலும் சீர் செய்வதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கருங்குளம் ஒன்றிய ஆணையாளரை சந்தித்து நேற்று செய்துங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட ஆணையாளர் உடனடியாக ஆவண செய்வதாக வாக்களித்தார்.
இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த அழகம்மாள் கூறும்போது, எங்கள் பகுதி மக்கள் குடிதண்ணீருக்கும் மிகவும் அவதிப்படுகிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற கிணற்று நீரை குடிக்கும் நிலை ஏற்படுகிறது . எனவே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் எங்கள் மக்களுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தெற்கு காரசேரி அரசன் தெரு மக்களுக்கு உடனடியாக குடிதண்ணீர் வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.