மூடிக்கிடக்கும் செய்துங்கநல்லூர் சித்தா மருந்தகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமககள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இவ்வூரில் சுற்றுபகுதியில் சுமார் 42 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்துக்கு மேல் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சந்தை, போஸ்ட் ஆபிஸ், மின் அலுவலகம், பஸ் நிலையம், ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்பட முக்கிய தேவைக்கு செய்துங்கநல்லூர் வந்து செல்ல வேண்டியது உள்ளது. இங்கு பல தனியார் மருத்துவ மனை உள்ளது. ஆனால் ஏழை எளிய மக்கள் பயன்பெற செய்துங்கநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி வசதி கிடையாது. இந்த ஊரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த ஊரில் சித்தா மருந்தகம் ஒன்று இயங்கி வந்தது. இந்த மருந்தகத்தில் தினமும் மருத்துவர் வந்துசெல்வார். எனவே இப்பகுதி மக்கள் இந்த மருந்தகத்தினை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த மருந்தகம் மூடிப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி மககள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த கொம்பையா கூறும்போது, கடந்த 35 வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு சிறந்த ஆஸ்பத்திரியாக செய்துங்கநல்லூர் சித்தா மருத்துவ மனை இயங்கி வந்தது. கருங்குளம் ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்ட பின்பு அங்கு சித்தா பிரிவு இருந்த போதும்கூட செய்துங்கநல்லூரில் நோயாளிகள் மிக அதிகமாக இங்குள்ள சித்தா மருத்துவமனைக்கு வந்து சென்றனர். இதற்கிடையில் கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பணி ஓய்வு பெற்ற பின்பு அதற்கு மாற்று டாக்டர் பணி அமர்த்தப்படவில்லை. அதன் பின் மருந்தகர் ஒருவர் பணியாற்றி நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து வந்தார். இறுதியில் அவர் பணி ஓய்வு பெற்றவுடன் ஆஸ்பத்திரியையே மூடி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே உடனடியாக செய்துங்கநல்லூர் சித்தா மருந்தகத்தினை திறக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
செய்துங்கநல்லூர் சித்தா மருத்தகத்தினை திறக்க வாக்குறுதி தரும் பாராளுமன்ற வேட்பாளரையே ஆதரிப்பது எனஇப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.