செய்துங்கநல்லூரில் உயிர் பலிவாங்க துடிக்கும் நெடுஞ்சாலை துறை பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு புதன்கிழமை தோறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த சாலையில் புதன்கிழமை சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள். மற்ற நாள்களிலும், இங்குபோக்குவரத்து மிக அதிகமாக காணப்படும். இந்த சாலையில் நடுவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் செல்லும் இருசக்கரவாகனங்கள் எதிர்பாரவிதமாக தவறி விழுந்து விடுகிறது. இந்த சமயத்தில் மிக வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகிறது. அதோடு மட்டும் வேகமாக வரும் கனரக வாகனங்கள் இந்த பள்ளத்தில் விழாமல் இருக்க திரும்பும் போது அருகில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபாதை பக்தர்களை பதம் பார்க்கும் அவலம் ஏற்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சேக் அப்துல்காதர் கூறும் போது, இந்த இடத்தில் அதிகமான மக்கள் கூடுகிறார்கள். திருச்செந்தூர் நடைபாதை பக்தர்கள் மிக அதிகமாக நடந்து செல்கிறார்கள். இதற்கிடையில் இதுபோன்ற மரண குழியில் விழும் வாகனங்கள் பெரும் விபத்துக்குள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அவலம் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்செந்தூர் மெயின்ரோட்டை அகலபடுத்தும் பணி விரைவில் ஆரம்பிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதற்கான பணி துவங்கியதாக தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற பள்ளங்களையாவது நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்து தரலாம். ஆனால் அதையும் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தினால் செய்துங்கநல்லூர் ஊருக்குள் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.