செய்துங்கநல்லூரில் மக்கள் நடந்தே செல்ல முடியாத சாலையால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான செய்துங்கநல்லூர் சிவந்திபட்டி சாலை உள்ளது. இந்த சாலையில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, செயிண்ட மேரீஸ் கல்வியல் கல்லூரி ஆகியவை உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் உள்ளது. மேலும் ஸ்ரீராமன் குளம், குத்துகல், முத்தூர், கொடிக்குளம், சிவந்திபட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல மிக முக்கிய மான சாலையாக இந்த சாலை விளங்குகிறது. ஆனால் இந்த சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாத காரணத்தினால் குண்டும் குழியுமாக மாறி விட்டது. எனவே மக்கள் நடந்து செல்ல முடியாதநிலையில் உள்ளது. சில இருசக்கர வாகனங்கள் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இருந்து சிவந்தி பட்டி சாலையில் இறங்கும் போதே அங்குள்ள குண்டும் குழியிலும் மாட்டி விபத்துக்குள் சிக்குகிறது.
இதுகுறித்து சுந்தரபாண்டிய சாஸ்தா மும்பை அன்னதான அறக்கட்டளை செயலாளர் தாஸ் கூறும் போது, எங்கள் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலுக்கு பங்குனி உத்திரத்தின் போது 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் அவர்கள் பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் வருவார்கள். மேலும் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரில் இந்தி தேர்வு டைப்ரைட்டிங் தேர்வு உள்பட பல தேர்வுகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்து செல்வார்கள். ஆனால் மிக முக்கிய இந்த சாலை போடப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. இதுவரை நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. பங்குனி உத்திரத்திற்கு முன்பு இந்த சாலையை செப்பனிட்டால் மிக உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மிக முக்கியமான இந்த சாலையை உடனே பழுது பார்த்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.