செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுகிறார்கள் . புதன் கிழமை தோறும் கூடும் வாரசந்தையில் 1 லட்சம் பேர் கூடுகிறார்கள். மேலும் இங்கு ரயில் நிலையம், பஸ் நிலையம், தபால் நிலையம், கருங்குளம் ஒன்றிய அலுவலகம் உள்பட பல அலுவலகங்கள் உள்ள காரணத்தினால் மிக அதிகமான நபர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வூரில் சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். எனவே குப்பைகள் நிறைந்த நகரமாகவே இந்த நகர் விளங்குகிறது. இங்கு குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் போராடி வருகிறது. குறிப்பாக இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறு வண்டி போதுமானது அல்ல. இந்த வண்டியும் தற்போது பழுதாகி விட்டது.
எனவே குப்பையை அகற்ற ஜேசிபி இயந்திரம், மற்றும் வாடகை டிராக்டர் கொண்டு வந்து இரண்டு நாளாக குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து குப்பை அகற்றும் தொழிலாளி பெருமாள் கூறும்போது, செய்துங்கநல்லூரில் மிக அதிகமான குப்பை சேருகிறது. அதை அகற்ற போதுமான தொழிலாளிகள் இல்லை. அவர்களுக்கும் போது மான சம்பளம் இல்லை. இவர்களுக்கு என குப்பை அள்ள ஒதுக்கப்பட்ட வண்டி பழுதாகி விட்டது. எனவே கடந்த 1 வார காலமாக குப்பை சேர்ந்து விட்டது. தற்போது நிர்வாகம் வாடகை டிராக்டர் கொண்டு வந்து குப்பையை அகற்றி வருகின்றனர். ஆனாலும் பணி விரைவாக நடைபெறவில்லை. எனவே நவீன குப்பை தொட்டி, அதை முறைப்படி தட்டி வெளியே அள்ளிச்செல்ல குப்பை லாரி போன்றவற்றை மாவட்ட ஆட்சி தலைவர் தனது சிறப்பு கவனத்தில் கொண்டு செய்துங்கநல்லூருக்கு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
செய்துங்கநல்லூருக்கு சவாலாக விளங்கும் சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி, கூடுதல் சுகாதார சிப்பந்திகளை உடனே நியமனம்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்துங்கநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ் போடலாம்
போராடும் பஞ்சாயத்து
செய்துங்கநல்லூரில் மிக அதிகமான ஜனத்தொகை உள்ளது. நிர்வாகத்துக்கு மற்ற கிராம பஞ்சாயத்துக்கு வருவது போலவே பணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை கூட சரிவர நிறைவேற்ற முடியவில்லை. மிக முக்கிய தேவைகளான மின் விளக்கு, சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றம் போன்ற பிரச்சனைக்கு உடனடியாக பஞ்சாயத்தால் தீர்வு காணமுடியவில்லை. பஞ்சாயத்துக்கு தெரு விளக்கு மாட்ட தனியாக ஊழியர்கள் இல்லை. இருக்கும் சுகாதர சிப்பந்திகளும் போதுமானதாக இல்லை . எனவே இவர்களை வைத்து அடிப்படை வசதிகளை செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் திணறி வருகிறது. எனவே இந்த பஞ்சாயத்தினை பேரூராட்சியாக மாற்றினால் அடிப்படை வசதி செய்ய ஏதுவாக இருக்கும். அதற்கான நடவடிக்கை யை அரசு எடுக்குமா என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் & வாடகை லாரி மூலம் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.