
செய்துங்கநல்லூரில் உள்ள மெயின்ரோடு சீரமைக்கப்படுமா என ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி & திருச்செந்தூர் மெயின்ரோடு மிகவும் பிரசித்தி பெற்ற சாலை. இந்த சாலையில் செய்துங்கநல்லூர் பஜார் முதல், வாய்க்கால் பாலம் வளைவு வரை சாலைகள் சிதிலமடைந்து கிடக்கின்றன, இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரிககை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் கூறும்போது,
திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள செய்துங்கநல்லூர் பஜார் முதல், வாய்க்கால் பாலம் வளைவு வரை சாலை மிக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து பல முறை நெடுஞ்சாலை துறையினர் புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த சாலை வழியாகத்தான் திருச்செந்தூர் முருகன் கோயில், குலசேகரபட்டணம் கோயில், நவதிருப்பதி, நவகையலாயம், நவலிங்கபுரம், வனத்திருப்பதி உள்பட இந்து திருத்தலங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில், காயல்பட்டணம் தர்க்கா உள்பட பல இடங்களுக்கு இந்த பகுதி வழியாகத்தான் மக்கள் சென்று வருகிறார்கள். செய்துங்கநல்லூரில் வாரசந்தை உள்ளது, சுற்றுவட்டார கிராமத்து மக்கள் இந்த வாரச் சந்தைக்கு காய்கறிகள் பொருட்கள் வாங்க வரும்போது, இந்த சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகளுக்குள் சிக்கிக்கொண்டு விபத்து ஏற்படுகின்றன, அதுமட்டுமின்றி வாகனங்களும் பழுதாகி விடுகின்றன, செய்துங்கநல்லூர் வாய்க்கால் பாலம் வளைவு பகுதியில் கார்கள், வேன்கள், வரும்போது குழியில் சிக்கி விடாமல் இருக்க வலது பக்கமாக ஏறி வருகின்றனர், இதனால் எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி வளைவு பகுதியில் கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நலன் கருதி சிதிலமடைந்த இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.