கால்வாய் கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு மக்கள் குறை கேட்டார். ஊராட்சி செயலாளர் நம்பிபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வரவேற்றார்.
கால்வாய் கிராமத்துக்கு குடிதண்ணீர் தேக்க தொட்டி வேண்டும், சமுதாய நலக்கூடம் கட்டி தரவேண்டும், ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். மருதூர் அணை மேலக்காலில் வீரளபேரிக்கு செல்லும் 30 எண் மடையை சீரமைக்கவேண்டும், கால்வாய் சாலையை விரிவு படுத்த வேண்டும், கூடுதல் பஸ் வசதி அமைத்து தரவேண்டும். கால்வாயில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியை சுற்றி சுற்றுபுறச்சுவர் கட்டி தரவேண்டும். வல்லகுளம் & கால்வாய் சாலையை சீரமைக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் கல்லூரியில் பயணிகள் நிழற்கூடம், கால்வாயில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கவேண்டும். செய்துங்க நல்லூருக்கு நூலக கட்டிடம் வேண்டும். ஸ்ரீவைகுண்டம் &பேய்குளம் செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவரங்கப்பட்டி வந்து செல்லவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கையை பொதுமக்கள் வைத்தனர்.
அதன் பின் கனிமொழி எம்பி பேசிய போது, நீட் பரிட்சை கிராம மக்களின் முன்னேற்றத்தினை மிகவும் பாதிக்கிறது. எனவே மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு தான் மருத்துவ சீட் என்பதை மாற்றி அனைவருக்கும் மருத்துவ சீட் என மாற்றியவர் கலைஞர் அவர்கள். மாவட்ட தோறும் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தவர். கால்வாய் கிராமத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் தான். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பிரச்சனை முக்கியமல்ல. அவரை வளர்த்தவர் ஜெயலலிதா, அவரின் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை யடிக்க திட்டம் வகுத்தவர் எடப்பாடி. இதை நாங்கள் யாரும் சொல்லவில்லை. பிரபல பத்திரிக்கை பட்டியல் இடுகிறது. வளர்த்தவரையே பலிகிடாவாக ஆக்கும் போது தமிழக மக்களை பலிகிடாவாக்க தயங்கமாட்டார் எடப்பாடி. அனைவருக்கும் அரசுவேலை வாங்கி தருவேன் என நான் கூற மாட்டேன். ஆனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக பாடுபடுவேன்.
செய்துங்கநல்லூரில் நூலகத்தில் படிக்க பல மாணவர்கள் வந்து செல்வதாக அறிந்தேன். படிப்பதற்கு ஆர்வம் காட்டும் அவர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதல் கட்டிடம் கட்டி தர எனது நிதியில் ஓதுக்கீடு செய்வேன். மற்ற திட்டங்களும் திமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன படிப்படியாக செய்து தரப்படும் என பேசினார்.
அவருடன் உமரிசங்கர், வழக்கறிஞர் ஆறுமுகபெருமாள், பார்த்தீபன், இலுப்பைகுளம் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இசக்கிபாண்டியன் தலைமையில் கால்வாய் எல்கையில் இருந்து கனிமொழி எம்பிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 50 பைக்கில் தொண்டர்கள் முன்செல்ல பின் கனிமொழி எம்.பி. அழைத்துச்செல்லப்பட்டார்.


