உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தூதுகுழி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன பரப்பில் சம்பங்கி பூக்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த சம்பங்கி பூ விவசாயம் தொழிலே முழுமையாகும். இதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்தே விவசாயிகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இங்கு விளைகின்ற பூக்கள் அனைத்தும் செய்துங்கநல்லூருக்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டு அவை பிரித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், சாத்தான்குளம், திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும்.
கடந்த மாதம் வரை ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்ட சம்பங்கி பூ தற்போது விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாகவும், போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் பூ ஏற்றுமதி இல்லாமல் போனது. இதனால் விவசாயிகள் தினம் தோறும் பறிக்கின்ற சம்பங்கி பூவை குப்பையில் கொட்டுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகள் பூவை பறிக்காமலே விட்டு விடுகின்றனர்.
இதனால் பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பூ விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.