செய்துங்கநல்லூரில் வருத்தெடுக்கும் வெயிலால் , பகலில் வெளியே தலை காட்ட மறுக்கும் கட்சி தொண்டர்களார் பஜார் வெறிச்சோடி கிடக்கிறது. விளம்பர படத்தினை பார்க்க கூட மக்கள் கூடுவது இல்லை.
செய்துங்கநல்லூர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஊர். இவ்வூரில் தினமும் சுற்று பகுதியில் 42 கிராமத்தினை சேர்ந்த மக்கள் கூடுகிறார்கள். காலையில் இங்கிருந்து ஆயிரக்கணககான தொழிலாளர் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு தொழில் செய்ய பஸ் ஏறிச்செல்வார்கள். எனவே இந்த ஊரில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக காணப்படும். நெல்லை தூத்துக்குடி மாவட்ட இணைப்பு இடத்தில் செய்துங்கநல்லூர் உள்ளது. ஆனால் சுட்டெரிக்கும் வெயில் உள்ள காரணத்தினால் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரை பஜாரில் கூட்டமே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி பாராளுமன்றத்தில் திமுக சார்பில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியும், பி.ஜே.பி மாநில தலைவர் தமிழசையும் நேருக்கு நேர் மோதும் காரணத்தினால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே அதிகமான தலைவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் நுழைவு வாயிலான செய்துங்கநல்லூர் , வசவப்பபுரம் மற்றும் வல்லநாட்டில் அதிகமான தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே இந்த பகுதிக்கு நேற்று வரை வந்து செல்லவில்லை. வேட்பு மனு தாக்கல் முடிந்தும் கூட இந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டவில்லை.
இதற்கிடையில் பஜாரில் மாலை 6 மணிக்கு மேல் கூடுபவர்கள் கூட பாராளுமன்ற தேர்தல் மீது அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. குறிப்பாக நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு படம் காட்டப்பட்டது. இந்த படத்தினை பார்க்கவும் அதிக வாக்காளர்கள் கூடியதாக தெரியவில்லை.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த கருப்பசாமி கூறும்போது, ஒவ்வொரு தேர்தலுககும் தேர்தல் கமிஷன் உத்தரவு படி பெரிய அளவில் விளம்பரம் உள்பட எதுவும் கட்சியினர் செய்ய முடியவில்லை. எனவே வருடத்துககு வருடம் தேர்தல் மோகம் மககளிடையே குறைந்து வருகிறது. போர்டு கட்ட, வேன் பிரச்சாரம் செய்ய, கட்சி கொடு கட்ட என பணிகள் செய்ய பெரும்பாலான பணியாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் தற்போது தேர்தல் கட்டுபாடு காரணமாக கூலி வேலை செய்பவர்கள் மற்ற வேலையை தேடி சென்று விடுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பல சட்டமன்றம் உள்ள காரணத்தினால் குறிப்பிட்ட காலத்தில் வாக்காளர்களை சேகரிக்கத்தான் வேட்பாளர்களால் முடிகிறது. சில நேரங்களில் தலைவர் வந்தால் அவர்களோடு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வேட்டபாளர்கள் சுற்று பயணம் வர தயாராக இருந்தாலும் கூட சுட்டெரிக்கும் வெயில் அவர்களை வர விடுவதில்லை. அதன் தாக்கம் இரவு வரை நீடிக்கிறது எனவே பொதுமக்களும் வீடுகளில் சென்று முடங்கிவிடுகின்றனர். இதனால் இந்த தேர்தல் பிரச்சாரம் செய்துங்கநல்லூர் பகுதியில் குறைந்துள்ளதை வெகுவாக காணமுடிகிறது என்றார்.
இதற்கிடையில் வாக்காளர்களை உற்சாகபடுத்தும் விதமாக பி.ஜே.பி.அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை என்றும், அதிமுக அரசு வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவித்து இருந்தது. அந்த பணத்திற்காக முண்டியடித்துக்கொண்டு எழுதி கொடுத்த பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் பணம் எதுவும் ஏறவில்லை. இதனால் மக்கள் மௌனமாக உள்ளனர். இந்த மௌனம் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.


