ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பொது மக்கள் தங்களுக்கு நோய்கள் ஏற்படும்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். எனினும் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவசரகால சிகிச்சைகள் மற்றும் மேல் சிகிச்சைகளுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களும் வியாபாரிகள் சங்கத்தினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டது. அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிட வளாகத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்ற பின்னர், நேற்று முன்தினம் கொரோனா நோய் தொற்று சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பாக மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்தார். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் குறித்து ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கூறுகையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிக்கள் குறித்து தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து வருகிறோம்.
இதன்படி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். இங்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை என்பது மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற கூட்டத்தில் தெரியவந்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி கொள்ள வேண்டும்.பொது மக்களின் நீண்டகால கோரிக்கையான ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் நடைபெறும். என்றார் அவர்.
இந்தநிகழ்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மருத்துவர் வெங்கட்ரங்கன், உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், வட்டார தலைவர் நல்லக்கண்ணு, வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், வட்டார செயலாளர் மதிசேகரன், நகர பொருளாளர் சொரிமுத்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிச்சைகண்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொதுச்செயலாளர் அலங்காரபாண்டியன், வட்டார துணைத்தலைவர் ஜெயராமன், வட்டார பொருளாளர் பால்ராஜ், வழக்கறிஞர் சிங்கப்பன், காங்கிரஸ் நகர இளைஞரணி துனைத்தலைவர் மகராஜன், நகர தலைவர் சித்திரை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகப் பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் கிருஷ்ணன், திமுக சார்பில் நகர செயலாளர் பெருமாள் மாவட்ட விவசாய அணிதலைவர் ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


