தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஜெயக்குமார் (35). ஆட்டோ டிரைவர். மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்றத்தின் 6வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் நேற்று இரவு 8 மணி அளவில் ஜெயக்குமார் தன் வீட்டு வாசல் அருகே உள்ள பெட்டிக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் பேய்க்குளம் பஜாரில் 100க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயக்குமார் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சாத்தான்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


