சாத்தான்குளம் போக்குவரத்து கழக பணிமனையை மூட நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து தாலுகா தலைமையிடத்திலும் அரசு போக்குவரத்துகழக பணிமனை செயல்பட வேண்டும் என அறிவித்ததையடுத்து சாத்தான்குளம் நாசரேத் செல்லும் சாலையோரம் கல்லாம்குத்து என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ1.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை சாத்தான்குளம் கிளையை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். பணிமனை தொடங்கப்பட்டு 6 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாலும், நிர்ணயிக்கப்பட்ட பேருந்துகள் ஒதுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இதற்கு சர்வ கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பணிமனை நஷ்டத்தில் இயங்குவதை காரணம் காட்டி இந்த பணிமனை இயக்கப்பட்டு வந்த 6 பேருந்துகளும் வேறு பணிமனைக்கு திடீரென மாற்றப்பட்டது. இதனை பணிமனையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்தது. இதனையடுத்து சாத்தான்குளம் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமையில் நடந்தது. இதில் சாத்தான்குளத்தில் உள்ள போக்குவரத்து பணிமனையை மூட நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், டிச.20ம்தேதி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சாத்தான்குளம் போக்குவரத்து கழக பணிமனை மூட நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து சர்வ கட்சி மற்றும் அனைத்து மக்கள் நல அமைப்புகள் சார்பில் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய மார்க்சிஸ்ட செயலாளர் ஜெயபால், வட்டார தமாகா தலைவர் முரசொலிமாறன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் செய்யது தெளபீக், போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் தர்மர், மாவட்ட திமுக பிரதிநிதி நயினார், வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் பால்துரை, வர்த்தக சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், அரிமா சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், ஆகியோர் பேசினர்.
இதில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் செந்தில்குமார், நகர கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜகோபால், நகர தமாகா செயலாளர் விஜய், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட திமுக பிரதிநிதி சரவணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கெங்கை ஆதித்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.